தனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தினை காட்டிக்கொடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்தவர்களை இனங்கன்டு, அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனித்து போட்டியிடுவதற்கு முற்பட்ட போது, அந்த முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரினோம். சஹ்ரானுடைய நாசகார சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க வேண்டாம் என்றோம். குறித்த முடிவானது முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்தும் என்று அவரின் கால்களைப் பிடித்துக் கேட்டோம். அவற்றைப் பொருட்படுத்தாது அவர் போட்டியிட்டதனால் இன்று மட்டு, மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அவருடைய 30வருட கால அரசியல் வரலாற்றில் அவர் தனது சொந்த மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவருடைய சுயநல அரசியல் நவடிக்கைகளினால் இன்று தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியிலே மிகக் குறுகிய வாக்குகளைக் கொண்டுள்ள ஹிஸ்புல்லாவினால் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. இந்நிலையில் அவர் ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச மக்களின் வாக்குகளை துவசம் செய்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்வதற்கு முயல்கின்றார்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்போம் என வாக்குகளுக்காக உரிமைக் கோசம் போடுகின்ற இவ்வாறான வங்குரோத்து அரசியல் வாதிகளினால் முஸ்லிம் சமூகம் இன்று வெட்கித் தலைகுனிந்துள்ளது. இவ்வாறு சமூகத்தைக் காட்டிக்கொடுத்து இனவாதிகளை திருப்திப்படுத்தி, சமூகத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தனது சொந்த பல்கலைக் கழகத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் சமூகத்தில் பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கி பெரும் பணி செய்த 40வருங்கள் பழமைவாய்ந்த ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தினை காட்டிக்கொடுத்து சமூகத்திற்கு துரோகமிழைத்தவர்களை இந்த தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறானவர்கள் ஒருபோதும் சமூகத்தைப் பாதுகாக்கமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.