உங்கள் வாக்கிற்காக சாராயம் அரிசி பணம் போன்ற வடிவங்களில் லஞ்சம் பெற்றீர்களானால் பின்பு சேவையை எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் அடுத்த ஜந்து வருடங்களின்பின்புதான் வருவார்கள். அவர்கள் லஞ்சம் கேட்பார்கள். அதனைத்தவிர்ககமுடியாது.
இவ்வாறு ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.
நேற்று வீரமுனைக்கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் 90வீத தமிழ்மக்கள் எமது தலைவர் சஜித்பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். இன்றும் அம்மக்கள் சோர்ந்துபோகாமல் தலைவர் சஜித்தின்மீது நம்பிக்கைவைத்து பிரதமராக அழகுபார்க்க எண்ணுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமிழ்மக்கள் செறிந்துவாழ்கிறார்கள். அங்கு குடிநீர்ப்பிரச்சினை காலாகாலமாக இருந்துவருகிறது.யாரும் தீர்ப்பாரில்லை. ;. இதுவரை வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
குறிப்பாக குண்டுமடு செல்வபுரம் தாண்டியடி கண்ணகிகிராமம் மண்டானை காயத்திரிகிராமம் கோமாரி மல்லிகைத்தீவு மத்தியமுகாம் பெரியநீலாவணை போன்ற பிரதேச தமிழ்மக்கள் வரட்சிக்காலத்தில் குடிநீரின்றி சொல்லொணாக் கஸ்டத்தை அனுபவித்துவருகிறார்கள்.
மல்லிகைத்தீவுக்கிராமத்தில் நிலவிய குடிதண்ணீர்பிரச்சினையால் சிறுநீரகநோய் ஏற்பட்டு சிலர் அநியாயமாக இறந்தனர். அத்தனை அனர்த்தம் நிகழ்ந்தும் இங்குள்ள தமிழ்எம்.பி. அங்கு செல்லவில்லையென அம்மக்கள் அழுதனர். இப்படிப்பட்டவர்களையா இன்னுமின்னும் நாம் தெரியவேண்டும்.
எனவே முதலில் இக்குடிதண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவேண்டுமென்பதே எனது அவா.பின்னர் ஒவ்வொரு தேவையையும் தலைவர் சஜித்தின்துணைகொண்டு நிச்சயமாக ஒவ்வொன்றாக தீhத்துவைப்பேன்.. என்றார்.