திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 28 இல் போட்டியிடும்முதன்மை வேட்பாளர் எஸ்.எச்.எம்.லாபீர்
அவர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் திலக் ராஜபக்ஷ முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வானது உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனையில் புதன் இரவு (27) இடம்பெற்றது.
இதன் போது பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் திலக் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்
திகாமடுல்ல மாவட்டத்தில் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக இந்த தேர்தலில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் போட்டியிடுகிறேன்.
அம்பாரை மாவட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இன்றி ஒற்றுமைப்பட்ட புதிய தலைமுறைய உருவாக்க பாடு படும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை பணித்துள்ளார். அத்துடன் இந்த மாவட்டத்தில் தமிழ் பேசும் பிரதேசங்களில் உள்ள மக்கள் எனக்கு மிகவும் வரவேற்பு அளித்து வருகின்றனர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற வியாத்கமவினால் நாங்கள் நாடு முழுவது 11 பேர் நிறுத்தப்பட்டுள்ளோம். அதில் ஒருவராக நான் இங்கு போட்டியிடுகிறேன்.
இந்த மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக நான் வைத்திய சேவையில் இருப்பதால் மக்களின் பிரச்சினைகளை தெரிந்து வைத்துள்ளேன். நான் வெற்றி பெறும் போது நிச்சயம் இம்மாவட்டத்தில் இன பேதமற்ற சேவையை முன்னெடுக்க என்னால் முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபயவை ஆதரிப்பதற்காக ஒரு மௌலவி என்ற வகையிலும் முஸ்லிம் என்ற வகையிலும் முஸ்லிம் கட்சி என்ற வகையிலும் முதலில் முன் வந்தது முபாறக் மௌலவியாகும். ராஜபக்ஷவிடம் அவருக்கென தனியான மரியாதை உண்டு. அவரது ஏற்பாட்டில் இங்கு கலந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
ஜனாதிபதி அவர்களின் தூர நோக்குள்ள சிந்தனை மற்றும் சிறந்த தலைமைத்துவம் மூலம் நாடு முன்னோக்கிச் செல்கின்றது. நாம் எமது ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவுக்கும் எனது இலக்கமான 7ம் இலக்கத்துக்கும் வாக்களித்து இன பேதமற்ற சேவைக்கு ஒத்துழைக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கடந்த காலத்தில் எமது மக்களை எமது அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றினர். கடந்த தேர்தலில் மாவட்டத்தை வெல்ல வேண்டும், ஊருக்கு எம் பி வேண்டும் போன்ற கோஷத்துக்கு நாம் மயங்கி இவர்களுக்கு வாக்களித்து கண்ட பிரயோசனம் என்ன? ஒன்றும் இல்லை.
இனவாதம் பேசுவோர் சிங்களவராக, தமிழராக, முஸ்லிமாக யாராக இருந்தாலும் நாம் கண்டிப்போம். இன்று டெலிபோன்காரர்கள் இனவாதம் பேசி, மக்களை அச்சுறுத்தி தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
இவர்களை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
டொக்டர் திலக் ராஜபக்ஷ இனவாதம் இல்லாத சிறந்த சிங்கள தலைவர். அவரைப்போன்றவர்கள் நமது இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகளை விட நமது பிரதிநிதியாக இருக்க தகுதி பெற்றவர். இவரைப்போன்ற படித்தவர்களை, பண்பானவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். பொது ஜன பெரமுனவுக்கு எமது கட்சி தேசிய ரீதியாக ஆதரவளிக்கும் நிலையில் அம்பாரை மாவட்டத்தில் நாம் ஆதரிக்கும் பெரமுனவுக்கு வாக்களிக்கும் அனைத்து தமிழ் , முஸ்லிம் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளில் ஒன்றை டொக்டர் திலக் ராஜபக்ஷவின் 7ம் இலக்கத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்வரும் காலங்களில்
ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சி தலைமையிலான அரசாங்கமே
ஆட்சியமைக்கப் போகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த ஆளுமை உள்ள நிர்வாகியாவார். மக்களுக்காகவே என்றும் பணியாற்றுகின்றார்.
அவருடைய அரசில் நாங்களும் பங்காளிகளாக வேண்டும் என்பதுடன் நமக்கு சார்பான டொக்டர் திலக் போன்றவர்களையும் நாம் பலப்படுத்த வேண்டும் என்றார்.