தனியார் கல்வி நிறுவனங்கள் சுகாதார வசதிகளுடன் இயங்குவது கட்டாயமாகும்-தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை
சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்
- வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் கிழக்கில் உள்ள தனியார் கல்வி நிறவனங்களை வழிப்படுத்துவதற்கான கூட்டம் தவிசாளர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில்; நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், எமது கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களின் வகிபாகம் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமாகக் காணப்படுகின்றது. கல்விப் புலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவ் விமர்சனங்களுக்கு அப்பால் நடைமுறையில் காணப்படும் போட்டிப்பரீட்சைக் கல்வி முறைமையிடையே தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை மறுக்கமுடியாததாகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக மாணவர்கள் மேலதிகமாக தனியார்கல்வி நிறுவனங்களில் அதிக மணி நேரத்தினை செலவிடுகின்றனர். மாணவர்கள் அதிகமாக ஒன்றுகூடும் மற்றும் நேரத்தினை ஒதுக்கும் இடங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் அத் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் அடிப்படைகளைக் கொண்டியங்குவது அவசியமானதாகும்.

கல்விக்காக மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள போதும் கொரோனா தொடர்பான எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஆகவே சரியான சுகாதார நடைமுறைகளுடன் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு அமையவே தாங்கள் பணியாற்ற பணிக்கப்படுகின்றீர்கள்.

மாணவர்களுக்கான சுகாதார உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுங்கள். அவ்வாறு பின்பற்றத்தவறும் நிலையில் பொது நன்மையினைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கல்வியூட்டல் என்பது உலகில் மிகச் சிறந்த பணி. அந்தப் பணியை முன்நிறுத்தி செயற்படும் நீங்கள் முன்மாதிரியான ஓர் கட்டமைப்பாக காலத்திற்குக் காலம் பிரதேச சபையும் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரும் இதர அரச தாபனங்களினாலும் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்திலிங்கம் இந்துஜன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் பிரதேச தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டு பரஸ்பர கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -