மலையக மக்கள் முன்னணியென்பது தனிக்குடும்பத்துக்குரிய கட்சி கிடையாது. அது மலையக மக்களுக்கான கட்சியாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.
அட்டனில் 04.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மலையக மக்கள் முன்னணியின் இரு பிரதான அமைப்புகளான கவுன்சில், மத்தியகுழு ஆகியன தற்போதைய தலைவருக்கு விலை போய் விட்டதாக அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினர்கள் எவருக்கும் விலை போககூடியவர்கள் அல்லர். கொள்கையின் அடிப்படையிலும், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்தவர்கள்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த சாந்தினி சந்திரசேகரன், உயர்பீடம் 2015 எடுத்த முடிவுக்கு எதிராக செயற்பட்டார். மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி, மலையக மக்கள் முன்னணியை தோற்கடிக்க முயற்சித்தார். ஆனால், இரண்டு எம்.பிக்களை எமது கட்சி பெற்றெடுத்தது.
அனுசா சந்திரசேகரன் கட்சிக்கு வந்த நாள் முதல் கட்சியுடனும், உயர்பீட உறுப்பினர்களுடனும் முரண்பட்ட நிலையிலேயே செயற்பட்டார். அவரது தாயார் அன்று செய்த பிழையை இன்று அனுசா செய்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு மலையக மக்கள் முன்னணியை தோற்கடிக்கும் நோக்கில் செயற்படுகிறார். அவரின் உரைகள் இதனையே உணர்த்துகின்றன.
மக்களுக்கு சேவைசெய்வதற்காக போட்டியிடுகின்றாரா அல்லது பண தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனுசா போட்டியிடுகின்றாரா? இலங்கையில் 14 மாவட்டங்களிலும் வாழும் 15 லட்சம் மலையக மக்களுக்கும் சொந்தமான கட்சியே மலையக மக்கள் முன்னணி. அது குடும்ப கட்சி கிடையாது.