அன்பின் அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்களே!
அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!
எமது மாவட்டத்தில் பல்வேறு அரச நிறுவனங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களே உங்களைப் போன்று ஒரு அரச உத்தியோகத்தராக இருந்து சமூக நலனுக்காக முன்ஓய்வு பெற்று உங்களில் ஒருவனாக சில விடயங்களை பகிர்வதில் அகமகிழ்வடைகின்றேன்.
நான் கடந்த 35 வருடங்களாக அரச ஊழியனாக இருந்த வகையில், முதலில் ஒரு ஆசிரியராக போட்டிப் பரீட்சையின் மூலம் எனது அரச பணியினை ஆரம்பித்து பின் மற்றுமொரு போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவையில் (SLEAS) தெரிவாகி கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பிரதி அதிபராகவும், மீண்டும் ஒரு போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை நிருவாக சேவையில் (SLAS) தெரிவாகி பல நிறுவனங்களில், பல பிரதேசங்களில் சேவையாற்றியதுடன் குறிப்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளராகவும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் இலங்கைக்கான ஜெனீவா தூதுவராலயம் என்பவற்றிலும் கடமையாற்றிய காலப்பகுதியில் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதிலும் மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் பலருக்கும் உதவிசெய்யக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
அதேபோன்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சில் கடமையாற்றியபோது எமது பிரதேசங்களில் விதாதா வள நிலையங்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் அரச தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த காலங்களிலும் ஏனைய காலங்களிலும் எமது பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் உதவக் கூடியதாகவும் இருந்தது.
மேலும் சுனாமியின் பின்னரான காலப்பகுதியில் சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பிரதேசங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பங்களில் பொது மக்களுக்கும் குறிப்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மற்றும் அரச அலுவலகங்களில் பணிபுரிந்த உத்தியோகத்தர்களுக்கும் மன நிறைவோடு சேவை செய்ய முடிந்ததையிட்டு சந்தோசமடைகின்றேன்.
அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் என்னால் முடியுமானவரையில் இன்றுவரை உதவக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது அரச உத்தியோகத்தர்கள் காலத்திற்குக் காலம் அனுபவித்து வரும் அனைத்து வகையான முரண்பாடுகள் தொடர்பிலும் நன்கு அறிந்தவன் என்பதோடு நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஏனைய நலனோம்பு விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒரு சமநிலையான போக்கை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் எமது பிராந்தியத்தின் கல்விச் சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்துவதே எனது பிரதான நோக்கமாகும்.
அரச உத்தியோகத்தர்கள் தாம் விரும்பும் பிரதேசத்தில் அல்லது நிலையத்தில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதன் மூலம் கூடுதலான உற்பத்தித் திறனையும் பெறமுடியும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் இன்று அரச ஊழியர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் அனுபவிக்கின்ற சொல்லொணாத் துன்பங்களுக்கு ஒரு தீர்வாக அமையலாம்.
உங்களைப் பொறுத்தளவில் நீங்கள் ஒரு அரச ஊழியர் மட்டுமல்லாது, திகாமடுல்ல மாவட்டத்தின் அரசியல் போக்கை மாற்றக்கூடிய பலம்மிக்க திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்க்கமான வாக்காளர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
அத்துடன் எமது சமூகத்தின் இன்றைய அரசியல் இருப்பின் அவசியமும், எமது பிரதேசத்தில் அரசியல் அதிகாரத்தின் தேவையும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் விஷேடமாக மாற்றத்திற்கான தேவையும் உணரப்பட்ட இந்நிலையில் இன்று அரசுடன் இணைந்து எமது சமூகத்தின் தனித்துவத்தைப் பேணும் வகையில் அதிகாரம் பெறக்கூடிய கட்சியான தேசிய காங்கிரஸில் அதன் தேசிய தலைவரும், முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில் சிறந்த, படித்த, அனுபவமிக்க, பண்புள்ள வேட்பாளர்களோடு நானும் திகாமாடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன்.
எனவே எமது கட்சியின் சின்னமான குதிரைச் சின்னத்திற்கு வாக்களிப்பதோடு உங்களது விருப்பு வாக்கில் எமது கட்சியின் தலைமையின் 01 ஆம் இலக்கத்திற்கும், எனது 03 ஆம் இலக்கத்திற்கும் தங்களின் பெறுமதியான வாக்குகளை இடுவதன் மூலம் உங்களில் ஒருவனாகவும், உங்களின் குரலாகவும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் எமது பிரதேசத்தில் உள்ள நீண்ட கால அரசியல் குறைபாடான வினைத்திறன் அற்றவர்களை புறந்தள்ளி கற்றறிந்த ஆளுமையுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்பி எமது குரலை உறுதியுடன் ஒலிக்கச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவரினதும் சிறந்த எதிர்காலத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்.
வஸ்ஸலாம்.
ஏ. எல். எம். சலீம்
SLAS,SLEAS
BA,MA (Pera) ,MPA (PIM)
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்