இந்தவிடயம் தொடர்பாக மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டி நகரில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பிரதானியால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு கடிதமொன்று அனுப்பட்டிருந்தது. உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகளில் இலங்கை அணிக்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அண்மையில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தேன். அதனை அடிப்படையாகவைத்து விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் என்னிடம் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டது. என்னிடம் இருந்த தகவல்களையெல்லாம் வழங்கினேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை.
எனவே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த சங்கக்காரவையும், மஹேல ஜயவர்தனவையும் விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவினர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு அழைத்தனர் என தெரியவில்லை. ஏனெனில் இதனுடன் கிரிக்கெட் வீரர்கள் தொடர்புபடவில்லை என நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
அத்துடன், தகவல்கள் இன்மையால் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பதிவுசெய்த அதிகாரிகளிடம் வினவினேன். ஆட்ட நிர்ணய சதி சட்டமூலத்தின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டனர்.
2017 இல்தான் சட்டம் நிறைவேறியுள்ளது. சம்பவம் இடம்பெற்றது. 2011. எனவே, விசாரணைகள் முன்னெடுக்க முடியாது. சங்கக்காரவின் சட்டத்தரணிகளும் இதனை, குறிப்பிட்டுள்ளனர். தவறான முறையில் விசாரணையை ஆரம்பித்து பின்னர், விசாரணை முடிவடைந்துவிட்டது என கூறமுடியாது. ஓரிருவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையை முடிவுக்கு கொண்டுவரமுடியுமா? எனவே, பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடன் அறிவிப்பு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கேட்டுள்ளேன்.