முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலை நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து நேற்று மீராவோடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
வருகின்ற காலம் முஸ்லிம் சமூகத்திற்கு சவால் நிறைந்த காலமாக வரவுள்ளது. அதனை நாம் சிந்தித்து முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்க கூடிய தலைமையை இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அமீர் அலி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளார். எனவே தனிப்பட்ட கோபதாபங்களை மறந்து ஒற்றுயோடு அனைவரும் வாக்களித்து எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
எனவே, சிறுசிறு பிரச்சினைகளை காரணம் காட்டி, நாம் பிரிந்து நின்று செயற்படுவோமானால் நம் சமூகம் சீரழிந்து விடும் இதனைக் கருத்தில் கொண்டு நாம் ஒற்றுமையோடு செயற்படுவோம் என்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ராசீக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா தொகுதிக்கான மத்திய குழு செயலாளர் ஏ.அக்பர், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான என்.எம்.பாகீர், சலீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.