மலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம். எனவே, எமக்கான ஆதரவை வழங்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அத்துடன், என்னையும், மனோவையும், ராதாவையும் எவராலும் ஏமாற்ற முடியாது. நாங்கள் மூவரும் இல்லாவிட்டால் மலையக மக்களை ஏமாற்றிவிடுவார்கள். அதற்கு இடமளிக்கவேண்டும் எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.
தலவாக்கலை கூமூட் தோட்டத்தில் 14.07.2020 அன்று பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர் எனது அமைச்சு பதவியும் பறிபோய்விட்டது. இதனால் அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் வீட்டுதிட்டங்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பிறகு நான்தான் அமைச்சராவேன். உங்களுக்காக முன்னெடுத்த அனைத்து சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பேன்.
மலையகத்தில் இவ்வளவுநாள் இருந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? நானும், மனோவும், ராதாவும் இணைந்த பின்னர் குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருந்தது. அந்த மன திருப்தியுடனேயே வாக்கு கேட்டுவந்துள்ளோம். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அப்போதுதான் சமுகத்துக்காக பேரம் பேசும் பலமும் அதிகரிக்கும்.
நாம் ஒருபோதும் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே பதவிகளை ஏற்றோம். நான் எமது மக்களுக்காக குருவிகூடையாவது கட்டிக்கொடுத்துள்ளேன். சின்ன பையன் என்ன செய்துள்ளார்?
நான் அமைச்சராக இருந்தபோது 2 தடவைகள் 3000 ரூபா வாங்கிக்கொடுத்தேன். 5 ஆயிரம் ரூபா முற்கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தேன். கட்சி சார்பாக அல்லாமல் பெருந்தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இத்தொகைகள் கிடைத்தன. ஆனால், இந்த அரசாங்கம் கட்சி பார்த்தும், ஆட்கள் பார்த்துமே 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குகின்றது. இது பெரும் அநியாயமாகும். எனவே, அரசாங்கத்துக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டவேண்டும்." - என்றார்.