நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் இந்த அரசாங்கம், கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களுக்கு பெரும் இடையூறாக அமையும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலையில் 12.07.2020 அன்று மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
" ஜனாதிபதி தேர்தலின் போது நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தோம். எமது மலையக மக்களும் அவருக்கே வாக்களித்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம்செய்தே மொட்டு தரப்பு வெற்றிபெற்றது.
பாதுகாப்பு பற்றி கதைத்தவர்கள் இன்று கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம் அமையுமானால் அது மக்களுக்கு இடைஞ்சலாகவே அமையும். இரவில் நடமாடினால் உள்ளே போட்டுவிடுவார்கள். பொலிஸாரிடம் சரி, உணமையை எடுத்துகூறிவிட்டு வந்துவிடலாம். ஆனால், இராணுவம் வந்தால் அவ்வாறு செய்யமுடியாது. சிவில் நிர்வாகத்துக்கும், இராணுவ நிர்வாகத்துக்குமிடையிலான வேறுபாடு இதுதான்.
அத்துடன், அமைச்சுகளுக்கான செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என எல்லாப்பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். இவ்வாறு படிப்படியாக நாடு இராணுவ ஆட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. போதாகுறைக்கு மலையகத்துக்கும் முகாம்வரப்போகின்றது. இதனை தடுத்து நிறுத்தவேண்டுமானால் எமது ஆட்சி உருவாகவேண்டும். எனவே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
13ஆவது திருத்தச்சட்டம், 19ஆவது திருத்தச்சட்டம் ஆகியனவும் நீக்கப்படும் என்கின்றனர். இதனை தடுப்பதற்கு மொட்டு கட்சிக்கு வாக்களிக்ககூடாது." - என்றார்.