அவ்விருவருள் ஒருவர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கீழ் இயங்கும் மொழித்துறையினைச் சேர்ந்த, அத்துறையின் முன்னாள் தலைவருமாகிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆவார். இந்நியமனத்திற்கு முன்னரே இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியராக (Professor) பதவி உயர்வு பெற்றிருந்த றமீஸ் அப்துல்லா, நாடறிந்த கல்விமானும், பேச்சாளரும், இலக்கியச் செயற்பாட்டாளருமாவார். இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப ஆசிரியர்களுள் ஒருவராக விளங்கும் இவர், இன்று முதல் தமிழ்த்துறை தலைமைப் பேராசிரியராக (Chair Professor) நியமனம் பெற்றுள்ளமை இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். விசேடமாக, இலங்கை வரலாற்றில் தமிழ்த்துறை முஸ்லீம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.
மற்றையவர் புவியியல் துறையின் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆவார். இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக விளங்கும் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், கலை கலாசார பீடத்தின் முன்னாள் பீடாதி மற்றும் புவியியல் துறையின் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகித்தவராவார். புவியியல் துறையின் உதவிப் பேராசிரியராக விளங்கிய இவர், இன்று முதல் அத்துறையின் தலைமைப் பேராசிரியராக (Chair Professor) நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும். இலங்கை வரலாற்றில் புவியியல்துறை முஸ்லீம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியராக நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.
இவ்விதம் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் முதன்மையான பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்திலிருந்து, அதன் முதன்மை விரிவுரையாளர்கள் இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இப்பல்கலைக்கழகத்திற்கும் கலை கலாசார பீடத்திற்கும் நிறைவான மகிழ்ச்சியினைத் தரும் விடயமாகும். இலங்கை முஸ்லீம் சமூகத்தில் நிலவும் புலமைத்துவ வெற்றிடத்தினை நிரப்புவதற்கு இவர்கள் போன்று இன்னும் பலர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வுயரிய அடைவுக்காக இரு தலைமைப் பேராசிரியர்களையும் மனதார வாழ்த்துகின்றேன்!
எம்.ஏ.எம்.பௌசர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
அரசியல் விஞ்ஞானத் துறை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.