"முன்னாள் அமைச்சர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் கூறினார்கள், நீங்கள் அனைவரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டாம். பிரிந்து பிரிந்து செல்லுங்கள். பல தேசிய கட்சிகளில் பங்குதாரர்களாக இருங்கள். ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் இட்டால் அக்கூடை உடையும் போது எல்லா முட்டைகளும் உடைந்து விடும். அவற்றை பங்கிட்டு போட வேண்டும் என்று கூறினார்கள்" என முன்னாள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.
அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரிவு முக்கியஸ்தர் அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீட் அடிக்கடி கூறுவார், நீங்கள் எந்த இனவாத கட்சிகளிலும் சேர வேண்டாம். தேசிய கட்சி அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் என்பார். அவர் தேசிய கட்சிகள் எனும் போது ஐக்கிய தேசிய கட்சி மட்டுமல்ல. சுதந்திர கட்சியையும் தான் கூறினார்.
அப்போது பலம் பொருந்திய கட்சியாகவிருந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்ககைகள் காரணமாக துண்டு துண்டாக சிதறிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியும் அவ்வாறு சிதறி விட்டது. ஆகவே முஸ்லிம்களுக்கு இன்று தேசிய கட்சியாக இருப்பது ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) மாத்திரமே என்பதனை நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் தேர்தல் முடியும் வரையாவது கேளுங்கள். தினமும் காலை 7 முதல் 9 மணி வரை வி.எப்.எம். இல் ஹட்சன் சமரசிங்க நடாத்தும் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அதன் பெயர் "சித்தமுல்ல". இன்றைய தினம் ரிஷாட் பதியுதீனை அழைத்திருந்தார்கள். நேற்றைய தினம் ரவுப் ஹக்கீமை அழைத்திருந்தார்கள். நான் ஹட்சன் இடம் கூறினேன். அங்கு இனவாதம் இல்லை.
ரிஷாட் பதியுதீன் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக கடைசி வரை மஹிந்தவுடனும் பஷிலுடனும் ஒட்டிக்கொண்டிருந்தார். 2015 இல் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக மாறினார். ரவூப் ஹக்கீமும் அந்நேரம் கடைசி பத்து நாட்களிலேயே மாறினார்.
இப்போது அரசாங்கத்தினர், நாம் தனியா ஆட்சியமைக்க போகிறோம். எந்த சிறுபான்மை கட்சிகளையோ அல்லது சிறு கட்சிகளையோ சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகின்றனர். எமக்கு அது தெரியும். ஜனாதிபதி தேர்தலில் அதனை பார்த்தோம். அத்தேர்தலில் நாங்கள் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் வென்றோம் என்ற போது அலி சப்ரி அவர்கள், இல்லை. ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்திருக்கிறோம் என்றார். அதனால் இந்த தேர்தலில் ஏழு முஸ்லிம் வேட்பாளர்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அங்கே மஸ்தான் என்றும் முஸ்தபா என்றும் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன சார்பாக இருக்கிறார்கள். இஸ்மாயில் ஹாஜியாரின் குழு மஹிந்த, பஷில் ஆகியோரிடம் பலமுறை சென்று முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை கம்பஹா மாவட்டம் சார்பாக நியமிப்பதற்கு முயற்சித்தார்கள். GPS என்ற அமைப்பு மூலம் அமைச்சர் பிரசன்ன மற்றும் நாலக கொடஹேவா உள்ளிட்டவர்களிடம் சென்று கேட்ட போதெல்லாம் பார்ப்போம் என்றார்கள். கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று இஸ்மாயில் ஹாஜியாரும் துணிந்து சொன்னார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை சந்திக்கும் போதெல்லாம் கூறுவார், மினுவாங்கொட, கல்லொழுவை முஸ்லிம்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வாக்களிக்கவில்லை என்பார். நாங்கள் இந்த தடவை அந்த தவறை செய்யக்கூடாது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த அந்த பத்து வருடங்களில் பாரிய அபிவிருத்திகள் நடைபெற்றது. ஆனால் பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கம் மக்களை ஏமாற்றியது. நான் SLBC இலிருந்து ஓய்வு பெற்ற போதும் மேலும் 5 வருடங்கள் பணிப்பாளராக சேவையாற்ற வாய்ப்பளித்தது மஹிந்த அரசாங்கம்.
1948 இன் பின்னர் வானொலியில் அதான் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் ஐவேளைக்கும் அதான் ஒலிபரப்பாகுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது 2009 காலப்பகுதியில் மஹிந்த அரசாங்கத்தில். 6 மணி செய்தி ஒலிபரப்பாகும் நேரத்தில் கூட பாங்கை நிறுத்த வேண்டாம். முஸ்லிம் சமுதாயத்திற்கு கௌரவம் வழங்குங்கள் என்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த கூறினார். அதற்கு சாட்சியாக இருந்த அலவி மௌலானா, அஸ்வர் ஹாஜியார் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை.
எதிர்காலத்திற்காக நாங்கள் இக்கட்சியை ஊர் ஊராக வளர்க்க வேண்டும். ஆகஸ்ட் 5 இன் பிறகு வரப்போகும் ஆட்சியில் அதிகாரம் மிக்க முஸ்லிம்கள் பதவியில் இருக்க வேண்டும். முக்கியமாக தேசியப்பட்டியலில் அலி சப்ரி, மர்ஜான் ஹாஜியார் போன்றோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்" என்றும் தெரிவித்தார்.