கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிந்து விடுமென்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்,
ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகளவில் 2 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது வெறுமனே பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டுமல்ல.
பல நாடுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இது சுகாதார அமைப்புகளுக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. உலகெங்கும் பல நாடுகளில் நீண்ட காலத்துக்கு பிறகு புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிற நாடுகளின் மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை கதையாக அமைகிறது.
முன்னேற்றம் என்பது வெற்றியை குறிக்காது. பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை. தடுப்பூசி வரும் வரையில் இந்த வைரசை எந்த நாடும் வெளியேற்ற முடியாது. தடுப்பூசி முக்கிய கருவியாக இருக்கும். விரைவில் நமக்கு ஒரு தடுப்பூசி கிடைக்குமென்று நம்புகிறோம்.
ஊரடங்கு எந்தவொரு நாட்டுக்கும் நீண்ட கால தீர்வாகாது. வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு இடையே அல்லது ஆரோக்கியத்துக்கும், பொருளாதாரத்துக்கும் நடுவே நாம் தேர்வு செய்ய தேவையில்லை. இது தவறான தேர்வு. மாறாக தொற்று நோய் என்பது ஆரோக்கியமும், பொருளாதாரமும் பிரிக்க முடியாதவை என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.
அனைத்து நாடுகளும் பொருளாதாரங்களையும், சமூகங்களையும், பாடசாலைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் பாதுகாப்பாக திறக்கும் புதிய கட்டத்துக்கு செல்ல வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம், இதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட உறுதி கொண்டுள்ளது.
ஸ்பானிஷ் புளூ 1918ம் ஆண்டு வந்தபோது அது கடந்து செல்ல 2 வருடங்கள் ஆனது. கொரோனா வைரஸூம் 2 வருடங்களில் முடிந்து விடுமென்று நம்புகிறேன்.
தற்போதைய தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்கள், கொரோனா வைரசை உலகம் அதைவிட குறுகிய காலத்தில் தடுக்க உதவும். அதே நேரத்தில் அதிக தொடர்புகளுடன், கொரோனா வைரஸ் பரவ சிறந்த வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதைத்தடுக்கும் தொழில் நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது.
கஷ்டம் என்பது எப்போதும் கற்றுக்கொள்ளவும், வளரவும், மாற்றவும் ஒரு வாய்ப்பாகும். கொரோனா வைரஸ் என்பது ஒரு நூற்றாண்டில் ஒரு முறை ஏற்பட்டிருக்கிற சுகாதார நெருக்கடி. ஆனால் இது உலகத்தை வடிவமைக்க நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறது. நமது குழந்தைகள் அதை சுவீகரித்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment