உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய பிரதான நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாரளுமன்றத்தில் நேற்று நடைபெறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச கொள்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறினாலும் அதில் பிரதான பொறுப்பாளி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
பாரளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் இது குறித்து 60 பக்கங்களை கொண்ட தனியான அறிக்கையை தயாரித்தேன்.
கிடைத்த தகவல்களை கவனத்தில் கொள்ளாது, தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து நான் முன்னாள் ஜனாதிபதியையே பிரதான பிரதிவாதியாக குற்றம் சுமத்தியிருந்தேன். அவரே அன்றைய பாதுகாப்பமைச்சர்.
பாதுகாப்பமைச்சராக நாட்டுக்காக எடுக்க வேண்டிய எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருக்கவில்லை. அதன் காரணமாகவே அவரை தற்போது ஆளும் கட்சியிடம் ஒப்படைத்துள்ளோம்.
முடிந்தால், திருத்தி எடுங்கள். அவர் எங்களது பக்கம் இருப்பதில் பயனில்லை என்பதால், நாங்கள் புனர்வாழ்வுக்குட்படுத்த அவரை உங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
அரச புலனாய்வு சேவையின் பிரதானி நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை முன்னாள் ஜனாதிபதியும் பாரளுமன்ற தெரிவுக்குழுவில் ஒப்புக்கொண்டார்.
April 4ம் திகதி தகவல் கிடைத்து, 21ம் திகதி தாக்குதல் நடக்கும் வரை தான் அறிந்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம். அத்துடன் அவர் பாதுகாப்புச் சபையையும் கூட்டவில்லை.
நாட்டில் தற்போது யுத்தம் இல்லை என்பதற்காக தற்போதைய ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ பாதுகாப்புச் சபையை கூட்டாமல் இருக்க முடியாது.
போர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற அனைத்து நாடுகளிலும் பாதுகாப்புச் சபை உரிய நேரத்தில் கூடும்.
எனினும் அன்றைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் வருவதையும் அவர் நிறுத்தியிருந்தார். பொலிஸ் மா அதிபர் வருவதையும் நிறுத்தியிருந்தார்.
பாதுகாப்புச் செயலாளரின் வருகையையும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு எதனையும் செய்யாது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும், பொலிஸ் மா அதிபரையும் சிக்கவைத்து விட்டு, அவர் தப்பிக்க முயற்சித்தார்.
அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் ஜனாதிபதி தகுதியானவர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்கவில்லை.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு பாடசாலைகளின் பாதுகாப்பு பொறுப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு படைகளின் பயிற்சி நிலையங்கள் வழங்கப்பட்டிருந்தன.
தாக்குதல் நடந்த போது சிங்கப்பூரில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் ஏன் நாடு திரும்பவில்லை என நான் பாரளுமன்ற தெரிவுக்குழுவில் கேள்வியெழுப்பினேன். தாக்குதல் காலை 8 மணிக்கு நடந்தது. ஜனாதிபதி இரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து வந்தார்.
மாலை 3 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று சிங்கப்பூரிலிருந்து வந்தது. இரவு 9 மணிக்கும் ஒன்று வந்தது.
ஏன் இந்த விமானங்களில் வரவில்லை என்று கேட்ட போது அவர் பொய் கூறினார். அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து கொண்டு பாரளுமன்ற தெரிவுக்குழுவிடம் பொய்கூறினார்.
மாலை 3 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வந்த விமானங்களில் ஆசனம் இருக்கவில்லை என்று சொன்னார். நாங்கள் தேடிப்பார்த்த போது 3 மணிக்கு வந்த விமானத்தில் 19 ஆசனங்கள் இருந்தன.
இரவு 9 மணிக்கு வந்த விமானத்தில் 30 ஆசனங்கள் இருந்தன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதியாக இருந்து கொண்டு பாரளுமன்றத் தெரிவுக்குழுவிடம் பொய் கூறினார் என பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment