எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல்;, சமூக நீர் வழங்கல் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவனஈர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய முன்பாக ஆரம்பமான கவனஈர்ப்பு பேரணி வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பிரதேச சபைக்கு சென்று அங்கிருந்து வாழைச்சேனை பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.
இதன்போது சோரம் போகாதே பாலைவனம் ஆக்காதே, உறிஞ்சாதே உறிஞ்சாதே நிலத்தடி நீரை உறிஞ்சாதே, மூடு மூடு ஐஸ் ஆலையை மூடு, வாழ்வதா நீர் இன்றி சாவதா?, தவிசாளரே தயக்கம் ஏன், குடிப்பத்கு நீர் இல்லை ஐஸ் உற்பத்திக்கு தேவையா, நீரை விற்று ஆதாயம் தேடாதே, அபிவிருத்தி மட்டும் போதுமா குடிநீர் வேண்டாமா, நீர் வளத்தினை காசுக்காக விற்காதே என பல்வேறு வாசகங்னள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று பிரதேசத்தின் நிலக்கீழ் நீரானது கடந்த சில வருடங்களாக குறைவடைந்து வருகின்றது. எனினும் இவ்வருடத்தில் மே மாதத்தில் இருந்து நிலக்கீழ் நீரானது மிகக் கடுமையாக வற்றிப் போகின்றது. இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடி நீரைப் பெற முடியாதுள்ளதுடன், பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழில் புரிவோர் காலைக் கடன்களை முடித்து நீராடி உரிய நேரத்திற்குப் பாடசாலைக்கோ வேலைத் தளங்களுக்கோ செல்வதில் சிரமமாய் உள்ளது.
வீட்டுச் சமையல், ஆடைகளைக் கழுவுதல், வீட்டுத் தோட்டத்தைப் பராமரிதல், கால் நடைகளுக்கு நீரில்லாமல் போதல் ஆகிய பிரச்சினைகளுக்கு முகம் கொடு;க்க வேண்டி உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இரண்டு பனிக்கட்டித் தொழிற்சாலைகள், மற்றும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை நிலையம் உள்ளது. அத்தோடு கறுவாக்கேணி பிரதான வீதியில் ஒரு பனிக்கட்டித் தொழிற்சாலை. மற்றும் கிண்ணையடி பிரதான வீதியில் ஒரு பனிக் கட்டித் தொழிற்சாலை என ஐந்து தொழிற்சாலைகளும் பல இலட்சக்கணக்கான லீற்றர்கள் நீரைத் தினமும் இயந்திரங்கள் மூலம் உறுஞ்சி எடுப்பதனால் இந்நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களால் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் ஆகியோருக்கு பொதுமக்களால் கையொப்பம் இடப்பட்ட மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிக்கை சமர்பித்து தீர்வினை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. அத்தோடு ஆர்ப்பாட்ட காரர்களால் மகஜரின் பிரதிகள் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment