J.f.காமிலா பேகம்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே, இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்றைய தினத்திலும் , எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளிலும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் வரை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 6.30 வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், குறித்த தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ வித்தாரன, லக்ஷ்மன் கிரியல்ல, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment