துறைசார் நிபுணர்களை உள்வாங்குவதில் மலினப்படும் தேசியப்பட்டியல்..!

சுஐப் எம்.காசிம்-


தேர்தல் முடிந்த மறுகணத்தில் தேசியப் பட்டியல் விவகாரம் கட்சிகளுக்குள் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேசியப்பட்டியல் இன்று வரைக்கும் அரசியல் கட்சிகளுக்குத் தலையிடிதான். துறைசார் நிபுணர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கத்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இப்பட்டியல் முறையை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தினார். அதிர்ஷ்டவசமாக 1983 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறாததால், 1989 ஆம் ஆண்டில்தான் இது நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1983 முதல் 1989 ஆம் ஆண்டு வரை, பலர் நியமன எம்.பிக்களாகத் தெரிவாகியிருந்தனர்.


1983 இல் பொத்துவில் தொகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.ஐ.உதுமாலெப்பையும், 1985 இல் மட்டக்களப்பு தொகுதி எம்.பி பரீட் மீராலெப்பை உயிரிழந்த பின்னர், றிஸ்வி சின்னலெப்பையும், 1988 ஆம் ஆண்டுகளில் ருவன்வெல்லத் தொகுதியில் யு.எல்.எம். பாரூக்கும், பேருவளைத் தொகுதி எம்.பியாக இருந்த பாக்கீர் மாக்கார் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட வெற்றிடத்திற்கு, அவரது மகன் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனவால் நியமன எம்.பிக்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். எனவே, “முதலாவது நியமன எம்.பிக்குரிய முஸ்லிம்” என்ற பெருமை உதுமாலெப்பைக்குச் செல்கிறது.

இப்போது 1989 இல் இருந்தான தேசியப்பட்டியலுக்கு வருவோம். இத் தேசியப்பட்டியல் விவகாரம், பல கட்சிகளுக்குப் பெரும் தலையிடிதான். ஜெயவர்தன எதிர்பார்த்த துறைசார் நிபுணர்கள் யார்? இவர்களும் பாராளுமன்றம் வரவேண்டுமென ஏன் அவர் விரும்பினார்? ஒரு காலத்தில் கல்விமான்கள், கனவான்கள் எனச் சமூகத்தின் உயர்நிலை வகுப்பாரே மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வந்தனர். படித்தவர்களுக்கு மட்டுமென்றிருந்த வாக்குரிமை, 1959 இல் பாராளுமன்றச் சட்டம் ஒன்றினூடாக, வயதெல்லை 18 ஆக குறைக்கப்பட்ட பின்னர்தான் நிலைமைகள் மறுதலையாகின. பணத்துக்காக வாக்குகள் வாங்கப்படல், மதுபானத்துக்கு வாக்காளர்கள் அடிமையாதல், இளைஞர் படையணி வளைக்கப்படுதல், சிந்திக்கும் வாக்காளர் வர்க்கம் இல்லாமலாதல் எல்லாம், வயதெல்லை குறைக்கப்பட்ட பின்னர் உருவான அரசியல் கலாசாரமானது. இந்த உணரல்கள்தான் தேசியப்பட்டியலை அறிமுகமாக்க காரணமானதோ தெரியாது.

ஒரு கட்சி பெறும் மொத்த வாக்குகளை 29 ஆல் பிரித்து, நாட்டில் அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதாசாரத்தைக் கணித்தே இப்பட்டியல் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அரசியல் ஆலோசகர்கள், பொருளியல் நிபுணர்கள், சமூக முன்னோடிகள், சர்வதேசத்தில் பரிச்சயமானோர் உள்ளிட்டோரை உள்வாங்குவதையே ஜே.ஆர்.இலக்காகக் கொண்டிருப்பார். ஏன், முன்னாள் எம்.பிக்கள் பலர், வாழ்க்கையை ஓட்டுவதற்குச் சிரமப்பட்ட பரிதாபத்தை அறிந்த ஜே.ஆர், எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தையும் அறிமுகப்படுத்தியதை மறப்பதற்கில்லை. இன்று தேசியப்பட்டியல் மற்றும் எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் போன்ற ஜெயவர்தனவின் நல்ல யோசனைகள், “தேன்முட்டி உடைந்து நரிகள் நக்கும் நிலைக்காகி விட்டது”. ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் ஆயுளுக்குப் போதுமானளவு உழைத்துக் கொள்கையில், இவர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என்றாகிவிட்டது. தேசியப்பட்டியல் விவகாரமோ, கட்சித் தலைவர்களை “பிச்சை வேண்டாம் கதவைத்

ஐக்கிய மக்கள் சக்திக்கு இம்முறை கிடைத்த ஏழு தேசியப் பட்டியல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு வழங்கப்படாத விடயம், பாரிய துரோகமாகக் காட்டப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டது. பின்னர், இது அடக்கமாக வாசிக்கப்பட்டதற்கும் பல பின்னணிகள் உள்ளன. தலைவர்களை விடவும் பாராளுமன்றத்துக்குள் தலைகாட்ட விரும்பியோரே விடயத்தைப் பெரிதாக்கப் புறப்பட்டனர். ஒன்றுக்கு ஏழெட்டுப் பேர், ஏர் பிடித்தால் ஊதியத்துக்கு உழவன் எங்கே போவான்? உள்ளதைப் பங்கிட்டால்தானே ஊருக்குள் (கட்சி) குழப்பம். ஒன்றுமில்லை என்றால் ஊரும் ஒற்றுமைதான். இதையுணர்ந்துதான் சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டில் மௌனித்தன. தேசியப்பட்டியல் விவகாரத்தால் முட்டி, மோதி எதிரியைப் பலப்படுத்துவதா? மாகாண சபையிலாவது அதிகாரத்தைப் பிடிப்பதில்லையா? “பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவோம்” என்ற அறிக்கையுடன் நின்றுகொண்டன சிறுபான்மைத் தலைமைகள்.

இருப்பினும், இரண்டாம் மட்டத் தலைவர்களோ முண்டியடித்து, முழக்கமிட்டனர். உண்மையில் இக்கட்சிளைப் பொறுத்தவரை, தேசியப்பட்டியல் கிடைப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட, கிடைக்காதிருப்பதால் கிடைக்கும் நிம்மதிகளே அதிகம். ஆனால், கிடைக்காமல் போன இந்தச் சந்தர்ப்பம்தான் முஸ்லிம் அரசியலின் முதலாவது தோல்வியை எழுதுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தேசியப் பட்டியல் கிடைக்காத அல்லது வழங்கப்படாத தேர்தலும் இதுதான். இத்தனைக்கும் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில்தான், இச் சமூகம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. ஏழு ஆசனங்களுக்கு மேல் பெற்றாலே, பங்காளிக் கட்சிகளுக்குப் பங்கீடு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல். எனவே, இதை ஏமாற்றம் என்கவும் முடியாது. ஆனால், எதிர்பார்த்தோருக்கு இது ஏமாற்றம்தான்.

எஞ்சிய ஐந்து தேசியப்பட்டியல்களை தலா ஒவ்வொன்றாக பெற்றுக்கொண்ட கட்சிகளின் நிலைமைகள், “நன்கு கொழுத்த பூனையின் பசிக்கு பல்லிக் குஞ்சு மாட்டியது” போன்றுள்ளது. இதனால்தான், ஐக்கிய தேசியக் கட்சி தனக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலைப் புசிக்காது, இன்று வரைக்கும் பார்த்துப் பார்த்து பசி தீர்க்கிறது. இது சுமார் 73 வருடங்களின் பின்னர், “யானை” இல்லாத கன்னி அமர்வாகவும் பார்க்கப்பட்டது.

இது மட்டுமா? அறிவிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை இரண்டு வருடங்களுக்குத் தருமாறு டெலோ கொடி பிடிக்கிறது. "அபே பலய" செயலாளரோ, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது பெயரை மொழிந்துவிட்டு, எம்.பியாக ஆசைப்படுகிறார். சைக்கிளும், மணியும்தான் பட்டியலால் பிரச்சினையில்லாது தப்பிய கட்சிகள்.

பறவாயில்லை, இதற்கு முன்னர் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றோர், அதிலிருந்து வளர்ந்து, தனிக்கட்சி அமைத்து தலைவரானோரின் வரலாறுகளைப் புரட்டின
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, 1989 ஆம் ஆண்டு புஹார்தீன் ஹாஜியார், அஸ்வர், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.ஏ.அப்துல் மஜீத், சம்சுதீன், எம்.எச்.ஆமித் மற்றும் ஹலீம் இஷாக்குடன் ஆரம்பமானது தேசியப் பட்டியல் வரலாறு. அம்பாறை மாவட்டத்தில் முதற் தடவையாகக் களமிறங்கிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனையில் மன்சூர், சம்மாந்துறையில் மஜீத் ஆகியோரைப் போட்டியில் நிறுத்தக் கூடாதென, முன்னாள் ஜனாதிபதியிடம் நிபந்தனை வைத்திருந்தது. இதனால்தான் இவ்விருவரும் தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டனர்.

1994 ஆம் ஆண்டிலிருந்து அலவி மௌலானா, ரவூப் ஹக்கீம், எம்.எம்.சுஹைர், ஷேகு இஸ்ஸடீன், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், ரிஸ்வி சின்னலெப்பை, பஷீர் சேகுதாவூத், அஞ்சான் உம்மா, மருதூர்கனி, காதர் ஹாஜியார், மயோன் முஸ்தபா, டொக்டர் ஹப்ரத், எம்.எஸ்.தௌபீக், எம்.பி.ஏ.அசீஸ், அன்வர் இஸ்மாயில், ஹுஸைன் பைலா, நிஜாமுதீன், கே.ஏ.பாயிஸ், எம்.ரி.ஹஸன் அலி, ஏ.எம்.எம்.நௌஷாட், சபீக் ரஜாப்டீன், ஆர்.எம்.இமாம், அஸ்லம். எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ், நஸீர், சல்மான், டொக்டர் ஹாபிஸ், நவவி, வி.சி.இஸ்மாயில், அலிசப்ரி, மர்ஜான் பழீல், முஸம்மில், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், என்று நீண்டு விரிகிறது. இவர்களில் மீண்டும் மீண்டும் பட்டியலில் பதவி பெற்றோரும் உளர். இதில், ஆர்.எம். இமாம் மற்றும் அஞ்சான் உம்மா ஆகியோரின் நியமனங்கள், முஸ்லிம் தலைமைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இதைப் பெறுவதற்காக இக்கட்சிகளுக்குள் நடைபெறும் போராட்டங்கள், நடந்துகொள்ளும் முறைகள், துறைசார் நிபுணர்களால் நடந்துகொள்ளக் கூடியதுதானா? இப்பட்டியல்களைப் பெற்றுக் கொண்டோர் பிற்பட்ட காலங்களில் அதே கட்சிகளுக்குச் செய்த துரோகங்கள், சமூக மேம்பாடுடையோர் என்பதை எடுத்துக்காட்டுகிறதா? இவர்களே இவ்வாறு குழிபறித்தால், சமூகத்தில் வேறு எவரை நம்புவது? எத்தனையோ கோடி ரூபாக்கள் புரளும் இப்பாராளுமன்றப் பதவி, சிலருக்கு எத்தனை கோடிகளைச் செலவிட்டாலும் கிட்டுவதில்லையே! இவ்வளவு பெறுமதியானதை வாங்கிவிட்டல்லவா, கடைசியில் கழுத்தறுக்கின்றனர். இவ்வாறான வடுக்களின் விளைவுகள்தான், இம்முறை சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை, இப்பட்டியல் விடயங்களில் மௌனம் காக்க வைத்ததோ தெரியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :