பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
பின்னர் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை (21) காலை 9.30 மணி வரையில் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment