நாம் 400 வீடுகளைக்கூட கட்டவில்லை என இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டன்ஷன் தோட்டத்தில் 350 வீடுகளும், பொகவந்தலாவயில் 350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இவை இரண்டைக்கூட்டினால்கூட 500 ஐ தாண்டிவிடுகின்றது. எனவே, இராஜாங்க அமைச்சருக்கு கண் குறைப்பாடு அல்லது கணக்கில் ‘வீக்’ போல தெரிகிறது. தனது அப்பாவை போலவே பொய் சொல்கிறார்.
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
உண்மையில் இந்த கொள்கை பிரகடன உரையில் உள்ள பல விடயங்கள் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டில் கைத்தொழில், சுயதொழில், விவசாய துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. அவற்றுக்கு தனித்தனியே இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்க வேண்டிய விடயமாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கிய நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தின்படி செயற்பட்டால் பொறுப்பான எதிர்கட்சி என்ற அடிப்படையில் அதனை வரவேற்போம்.
கௌரவ ஜனாதிபதி கூறியதுபோல சாதாரண மக்களுக்கான வைத்தியசாலை வசதிகள், குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் செயல்வடிவில் முன்னெடுக்கப்படுகிறதா என்பதில் நாம் அவதானத்துடன் இருப்போம்.
காணி பிரச்சினை பற்றி கெளரவ ஜனாதிபதி கூறினார். நான் அமைச்சராக இருந்த காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதனை தங்குதடையின்றி இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கட்டுபொல் செய்கை நிறுத்தப்படும் என கௌரவ ஜனாதிபதி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இது செயற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சிலோன் டீ என்ற சின்னத்திற்கு உள்ள மதிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போன்று அந்த தேயிலை துறையில் பணியாற்றும் எமது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கியுள்ளதால் 19வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்கும் சரத்துக்களை சேர்த்துக் கொண்டு யாப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவல் அறியும் சட்டம், அரசியல் யாப்பு கவுன்சில் போன்ற ஜனநாயகத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகளை நீக்கக் கூடாது.
மேலும் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால் அது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது.
தற்போதுள்ள தேர்தல் முறையால் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்றனர். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இலகுவாக பெரும்பான்மை பெற்றுள்ளனர். எனவே தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல திட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்கும் அதேவேளை, நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தால் அதனை கட்டாயமாக எதிர்ப்போம்.
எனவே நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
0 comments :
Post a Comment