வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் கொரன்டைன் நிறைவு செய்த பின்னர் தங்களின் வீட்டில் மீண்டும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருத்தல் கட்டாயமாகும். இதனை மீறுகின்றவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸ் நக்பர் தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும்போது, அவர்கள் இருக்கின்ற குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கும், பொலிஸ் நிலையத்துக்கும் முதலில் அறிவித்தல் வழங்கவேண்டும் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு தகவலை வழங்கும்போது, உங்களின் தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயம் உறுதிப்படுத்தும். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் குறித்த 14 நாட்கள் முடியும்வரை கண்ணானித்து சுய தனிமைப்படுத்தல் நிறைவுற்றதன் பின்னர் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்படும்.
சுகாதார திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களை கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும். தவறும் பட்சத்தில் சமூகத்தில் கொரோனா தொற்றை ஏற்படுத்த அவர்கள் உடந்தையாகின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு எதிராக சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அதி உச்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment