இந்நிலையில் இலங்கை முஸ்லிம் இளைய சமூகத்தை நோக்கி சில விடயங்களை கூறியாக வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் உயிர் மீது ஒருவர் வைத்துள்ள நேசமும் தேசத்தின் மீதான நேசமும் ஒரே சமமானதே. நபிகளாரின் தேசப்பற்று இதற்கு சான்றாக அமைகின்றது.
"மக்காவே ! நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி். அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டி இருக்காவிட்டால் நான் உன்னை விட்டு சென்று இருக்க மாட்டேன்." தாய் மண்ணை விட்டு துரத்தப்பட்ட போது நபிகளார் கூறிய வாசகம் இது .தேசப்பற்றின் ஆழ்ந்த நேசத்தை இவ்வார்த்தைகள் பறைசாற்றுகின்றன.
" ஒரு தேசத்தின் எழுச்சிக்காக ஒரு சமூகம் போராடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் தொடர்ந்தும் அச்சமூகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. தேசத்தின் எழுச்சிக்கு எவ்விதத்திலும் பங்கெடுக்காத சமூகம் இறந்த பிணங்களுக்கு சமமாகும் " என்று கலாநிதி முஹம்மத் இமாறா குறிப்பிடுகின்றார்.
அதனடிப்படையில் ஓர் இஸ்லாமிய இலங்கையனாக தேசப்பற்றுடன் வாழ்வது நம் மீதான தார்மீக கடமையாகும். நம் முன்னோர்களில் பலரும் தேசப்பற்றுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாட்டுக்காக தன் உழைப்பை, செல்வத்தை, கல்வியை செலவிட்டுள்ளார்கள். வரலாறு இன்றும் அதற்கான சான்றுகளைக் கொண்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று தேசப்பற்றுக் குன்றியவர்களாக, நாட்டு சட்டங்களைக் கூட மதிக்காதவர்களாக ஒரு கட்டுக்கோப்பற்ற சமூகமே இலங்கை முஸ்லிம் சமூகம் என்று சித்தரிக்கப்படுகின்றது. அதற்கு நம்மவர்களின் சில செயற்பாடுகளும் தீனி போட்டாள் போல் அமைகின்றன என்றால் அது மிகையல்ல.
"ஒரு சமூகம் சட்டத்தை துறக்கும் போது புழுதியை போன்று அது சிதறி மறைந்து விடுகின்றது."
( அல்லாமா இக்பால்)
என்றாலும் உதவிக்கரம் நீட்டுவதில் ,சமூக சேவைகளில் , நல்லிணக்க செயல்பாடுகளில் , பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பணி அளப்பரியது தான் .
இந்த அழகிய தேசத்தில் ஓர் அறுதிச் சிறுபான்மையாக நாம் வாழ்கிறோம். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பினும் தேசிய எழுச்சிக்காக உழைப்பதில் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக இருக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தில், அதிகரித்த தலாக் , போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் , நீரிழிவு, இதய நோய்கள் ,சுவாச நோய்களுக்கு பலியாகும் வீதம், வறுமை , பெண்கள் வெளிநாடு செல்லுதல் போன்றன அதிகரித்த வண்ணமே உள்ளன. சமூகம் இயக்கங்களாக பிரிந்து நிற்கிறது ,முஸ்லிம் இளைஞர்கள் அதிகமானோர் கல்வியில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் , திறமான அரசியல் தலைமைத்துவம் இன்மையால் சமூகம் தள்ளாடுகிறது.
நம் சமூகத்தின் சொல்லித் தீர்க்க முடியாத உள்வீட்டுப் பிரச்சினைகள் இவை.
மறுபக்கம் இனவாதம் நமக்கெதிராக தலைவிரித்தாடுகின்றது . ஊடகம் அரசியல் , சமூகம் என பலமான பிரச்சார ஆயுதங்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விழித்துக் கொண்டிருக்கும் போதே நம் சமூகத்தின் கண்கள் தோண்டப்படுகின்றது . அடிப்படை உரிமையான ஆடையிலிருந்து இறுதிப் பயணம் வரை எல்லாவற்றிலும் இனவாதம் மூக்கை நுழைக்கின்றது . மதமே இல்லாத கிருமிக்கு கூட நமது சமூகத்தை பலிகடாவாக்குகிறார்கள்.
இனவாதத்தை எதிர்த்து பதிலளிக்க ஓர் இலத்திரனியல் ஊடகத்தின் தேவையை சமூகம் பல்லாண்டு காலமாக வேண்டி நின்ற போதிலும் இன்றும் அது எட்டாக் கனியாகவே உள்ளது. நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் இனவாதம் என்ற சாபக்கேடு நம்மை அழித்து விடக்கூடும்.
இளைஞர் சமூகம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
ஊடகத்துறையில் , அரசியலில், சமூகத்தில் பலமான படையொன்றை உருவாக்க வேண்டும். வீழ்ந்து கிடக்கும் இளைஞர் சமுதாயத்தை கொஞ்சம் தட்டி எழுப்ப வேண்டும்.
இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சார அலைகள் எகிரி எழுகின்ற வேளையில் மௌனம் கலைத்து ,பிரிவுகளை தகர்த்து ஒரு தேசமாக எழ வேண்டிய தருணம் இது.
" ஒரு சமூகத்தின் எழுச்சி அதன் பண்பாட்டிலேயே தங்கியுள்ளது."
" இலங்கையில் தஃவாவுக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன பண்பாடுகள் என்ற வாயிலை தவிர." ( இமாம் கஸ்ஸாலி)
தேசப்பற்றை திடப்படுத்தல், சட்ட ஒழுங்கைப் பேணும் கலாச்சாரம் , சமூக நல்லிணக்கம் , மனிதாபிமானம் போன்ற உன்னதமான பண்பாடுகளை சுமந்து முழு இலங்கை தேசத்திற்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு முஸ்லிம் இளைஞர் சமூகமாகிய எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
" நல்லொழுக்கமும் இறையச்சமும் கொண்ட துடிப்பான இளைஞர் சமுதாயத்தின் ஊடாகவே இவ்வாறான அரசியல் பண்பாட்டு பாரம்பரியத்தை கட்டியெழுப்பலாம்."
( ஷெய்க் ரஷீத் அல் கன்னோசி ).
அபூபக்கர் ,உமரின் வரலாற்றில் வீரியம் கண்ட நாம் அதன் பாதையில் இனி வீர நடை போடுவோம்.
தூய்மையான பண்பாட்டு தேசத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வோம் .
இஸ்லாத்தின் மனிதநேயத்தை நம் தேச அரங்கிற்குள் மீள அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது . அதற்கான களமாக இன்றைய நாட்களை அமைத்துக் கொள்வோம்.
இங்கு சூழ்ச்சிகள் எந்த எழுச்சிக்கெதிராக வரையப்படுகின்றதோ அந்த எழுச்சியை நாம் மிகத் துல்லியமாகத் திட்டமிடுவோம் .
பலவீனமான சருகுகளாக அடிபடும் நிலையிலிருந்து பலமான சக்திகளாக மாறுவோம். தேசத்திற்காய் ஒன்றிணைவோம்.
"வழித்தடம்" (All University Muslim Student Association)
N.Rasmiya
University of Colombo
0 comments :
Post a Comment