கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற வீதி சமிக்ஞை விளக்குகளின் (கலர் லைட்) பராமரிப்புச் செலவுகள், அதன் மின்சாரக் கட்டணத்தை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகிற வீதி சமிக்ஞை விளக்குகளின் மின் கட்டணம், அதன் பராமரிப்புச் செலவுகள் தொடர்பில், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கொழும்பு மாநகர சபையிடம் தகவல்கள் கோரப்பட்டிருந்தன.
கொழும்பு மாநகர சபையின் பதில் மாநகர ஆணையாளரும் தகவலதிகாரியுமான கே.ஜீ.ஐ.எஸ்.கால்லகே, கைச்சாத்திட்டு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதில் கடிதத்தில், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 144 இடங்களில், 3 ஆயிரத்து 900 வீதி சமிக்ஞை விளக்குகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 3,900 வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு, கடந்த 5 வருடங்களில், சராசரியாக வருடமொன்றுக்கு 48 இலட்சம் ரூபாய் மின் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு 48 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ரூபாயும் 2016இல் 49 இலட்சத்து 89 ஆயிரத்து 664 ரூபாயும், 2017இல் 44 இலட்சத்து 69 ஆயிரத்து 440 ரூபாயும், 2018இல் 30 இலட்சத்து 27 ஆயிரத்து 429 ரூபாயும், 2019இல் 30 இலட்சத்து 93 ஆயிரத்து 125 ரூபாயும் மின் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வீதி சமிக்ஞை விளக்குகளுக்கான பராமரிப்புச் செலவுகள், 2015 வரையில் இலட்சங்களாகவும் 2016 முதல் இரட்டிப்பாகி கோடிக் கணக்காகவும் மாறியிருக்கிறது.
69 இலட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்த 2015ஆம் ஆண்டின் வீதி சமிக்ஞை விளக்குகளின் பராமரிப்புச் செலவு, 2016 முதல், அந்தத் தொகை இரட்டிப்பாகி, ஒரு கோடியே 29 இலட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாயாகவும், 2017ஆம் ஆண்டு ஒரு கோடியே 38 இலட்சத்து 25 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
அதுபோல, 2018இல், ஒரு கோடியே 43 இலட்சத்து 47 ஆயிரத்து 300 ரூபாயாகவும் 2019இல், ஒரு கோடியே 60 இலட்சத்து 66 ஆயிரத்து 400 ரூபாயாகவும் பராமரிப்புச் செலவு பண்மடங்காக அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment