கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கான கட்டணம் மற்றும் அபராதங்களை புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து அறவிடாதிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களை எந்தவொரு கட்டணமும் அறவிடப்படாது விமான நிலையங்களின் குடிவரவு மையங்களின் வழியாக வெளியேற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்ற காரணமாக புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சவுதி அரசாங்கத்தினால் தற்காலிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவை விட்டு வெளியேற முடியாத, வருகை தரு வீசாக்கள், மீள் நுழைவு வீசா அல்லது இறுதி வெளியேற்ற வீசா அல்லது காலாவதியான வீசாக்களையுடைய எந்தவொரு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளியும் கட்டணங்கள் இன்றி அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது தற்போது நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தீர்மானம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில், புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு, இலங்கை அரசாங்கம் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment