விடிவுக்காக காத்திருக்கும் பண்ராவளை மக்கள்(உமா ஓயா திட்டம்).



கட்டுரைத் தொகுப்பு:Tharshika Selvachandren
WithAfra Binth Ansar.✍️✍️

சந்த நகரம் என்று அழைக்கப்படுகின்ற பண்டாரவளையை சூழ்ந்து பெரும்பாலான கிராமங்கள் காணப்படுகின்றது. அங்குள்ள நீர் நிலைகள், நீருற்று,ஆறு ,நதி,வயல் என்பவற்றின் அழகு காட்சிகளால் பண்டாரவளை ஒரு சுற்றுலாத்தளமாகவும் உள்ளுர் வெளிநாட்டு மக்களை கவர்ந்திழுத்தது.
பெரும்பாலான மக்களுக்கு பண்டாரவளை பிரதேசத்தை மேலோட்டமாக பார்வையிடும் போது நாம் காணும் அந்த அழகு அங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கையோடு ஒப்பிடமுடியாது. இயற்கை வளங்களுடன் எதுவித பிரச்சினைகளுமின்றி வாழ்ந்த பண்டாரவளை மற்றும் சுற்றுப்புற மக்களின் வாழ்க்கை ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைகீழாக மாறியது.
கல்எக்க,ஹீல் ஓயா,மகுலுதோவ,தோவ,அய்பீல்ல,எல்லோஅராவ, உல்லே அராவ,மஹ உல்பத என நீர் சார் பெயர்பெற்றுள்ள பண்டாரவளை நகரம் இன்று நீரின்றி வரண்டு போயுள்ளது. அதுமட்டுமில்லாது நிலங்கள் வெடித்து, வீடுகள் உடைந்து ,நீரற்று,மரங்கள் இறந்து போய்,பயிர்ச்செய்கை முடக்கப்பட்டு,பாதைகள் குன்றும் குழியுமாகி,பாடசாலைகள் மூடப்பட்டு,கிணறுகள் வற்றி முற்றிலும் வரட்சியின் உச்சகட்டத்தில் காணப்படுகின்றன.
மகாவலி திட்டத்திற்குப் பிறகு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய வேலைத்திட்டம் உமாஓயத்திட்டமாகும். உமா ஓயவில் ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கான முதல் திட்டங்கள் 1987 இல் வந்தன, இவ் வேலைத்திட்டம் தொடர்பாக கடந்த 1991ம் ஆண்டில் செய்முறை வரைபடம் தயாரிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் ஆட்சி செய்த ஐ.தே.க. அரசு, உமாஓயா வேலைத்திட்ட செயல்முறை வரைபடம் மற்றும் அதுகுறித்த செயல்திட்ட அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டது. அதன்பின்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வந்ததும், உமா ஓயா குறித்த வரைபடம் மற்றும் செயல்திட்ட அறிக்கை மீளவும் தூசு தட்டப்பட்டு, அத்திட்டத்திற்கு உயிரூட்டப்பட்டு 2008 ஏப்ரல் 29 அன்று உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்திற்கான வைபரீதியான அடிக்கல் நாட்டப்பட்டது. அதையடுத்து,சலுகையடிப்படையிலான வட்டி முறையுடன் ஈரான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு, உமாஓயா திட்டத்தின் வேலைகள் ஆரம்பமாகின.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், ஹம்பந்தோட்ட தொழில்துறை எஸ்டேட், ஹம்பன்தோட்ட துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது. இதை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வு அல்லது சுற்றுச்சூழல் ஆய்வு இல்லாமல் அரசியல் நலன்களின் அடிப்படையில் இந்த பல்நோக்கு திட்டத்தம் அமுல்படுத்தப்பட்டது.
மின் உற்பத்தி, நீர்ப்பாசன நீர், குடிநீர் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் இந்த திட்டம் பல்நோக்கு திட்டம் என்று அழைக்கப்பட்டது. இத்திட்டத்தில் மின்அபிவிருத்தி திட்டமொன்றும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நீரை எடுத்துச்செல்லும் திட்டமும் உள்ளடங்கியுள்ளது. அத்துடன் டயரபா என்ற இடத்திலிருந்து புகுல்பொலை வரைக்குமான நீரை எடுத்துச்செல்லும் சுரங்கப்பாதையொன்றும், புகுல்பொலையிலிருந்து கரந்தகொல்லைக்குமான நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப் பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சுரங்கப்பாதையிலேயே, பெருமளவிலான நீர் கசிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 600 அடி ஆழத்திலேயே, இச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பண்டாரவெல, ஹலி எலா, வெலிமாடை, உவபாரனகம, எல்லா மற்றும் வெல்லவயா பிரதேச செயலகங்களில் சுமார் 7550 குடும்பங்கள் நிலத்தடி அகழ்வாராய்ச்சி மற்றும் அணைகள் கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இச் செயற்திட்ட பிரதேசத்தில் குடிநீர் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான 30 மில்லியன் கனமீற்றரை நீரை வழங்குவதாகவும் ,டயரபா மற்றும் பு{ஹல்பொல ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் நீர்த்தேங்களின் ஊடாக பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மற்றும் எட்டெம்பிட்டிய பிரதேசங்களுக்கு குடிநீரை வழங்கவும் எதிர்பார்த்தனர்.அத்துடன் இப் பிரதேசத்திலுள்ள 96 குளங்கள் இத்திட்டத்தினூடாக நீர்ப்பாசனத்திற்கான நீரால் போஷிக்கப்படுவதுடன் ,கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி அபிவிருத்தி ,புதிய தொழில் வாய்ப்புக்கள் ,நவீன தொழில் நுட்ப அறிவுடன் இணைந்த கைத்தொழில்கள் ஆகியவைகள் இத்திட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும் என நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வாக்குரிதியளித்தார்கள். இதன் தலைகீழ் நிலையே இன்று அவதானிக்க முடிகின்றது
இந்ம மாபெரும் திட்டத்தின் ஊடாக அங்கு வாழும் மக்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் வீடுகள் கண்ணீருடன் நிரம்பியுள்ளன. உடைந்த நிலையில் உள்ள வீடுகள் எப்போது தலையில் விழும் என்று சொல்ல முடியாது. கிணறுகள் உட்பட அனைத்து நீர் ஆதாரங்களும் வறண்டுவிட்டன. குடிக்க தண்ணீர் இல்லை. பயிரிட தண்ணீர் இல்லை. நிலமற்றவர்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்காக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பீட்டு அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளால் மற்றொரு குழு உதவியற்ற நிலையில் உள்ளது என பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
செய்யது அகமதும்மா (68)
நான் பிறந்து வளர்ந்த இடம் இது. இந்த உமா ஒயாத்திட்டத்தினால் வீடுகள் வெடித்துள்ளது. எந்த நிலையில் விழும் என்று தெரியாது. நீர் இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று நீர் எடுத்து வரவேண்டியுள்ளது. வீடுகள்;கட்டித்தருவதாக இதுவரை ஏமாற்றிக்கொண்டே இருகக்கிறார்கள். தற்போதையை வீடுகள் உடைந்து விழும் நிலையி;ல் உள்ளனர். கூலிவேலைகளே செய்துவருகின்றோம். வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். இதற்கு முன் அப்படியில்லை.எந்த பிரச்சினைகளும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் அனைத்தையும் இழந்துள்ளோம்.
எம்.எஸ் சமீல்(51)
2014 ஆம் ஆண்டின்போது இந்த உமாஓயாத்திட்டத்தின் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பணம் தருகிறோம் காணிகளைக் தேடச்சொன்னார்கள். அல்லது முஸ்லிம்களுக்கு காணிகள் தருவதாக சொன்னார்கள். அதுவும் இல்லை தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் கஷ்டப்படுகின்றோம். கூலி வேலைகளைச்செய்துகொண்டு வெடிப்பு ஏற்பட்ட வீடுகளை எங்கள் பணத்திலே சரிசெய்துகொண்டு வாழ்கின்றோம். ஒவ்வொரு 14 நாட்களுக்கும் குடிநீர் கிடைக்கிறது. அதுவும் போதாது. எங்களுக்கு தண்ணீர் நிரப்ப 500 சிறிய தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தண்ணீரை நிரப்ப அவை போதாது.
ஆர்.எம். தம்மிக்க பண்டார (44)
இது எனது சொந்த ஊர். எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. நாங்கள் அன்றிலிருந்து நெல் பயிரிட்டு வருகிறோம், மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டோம். ஆனால் இப்போது 2014 முதல் நாங்கள் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். இந்த உமா ஓயா நிலத்தடி சுரங்கப்பாதை எங்கள் கீழ் பகுதிகளுக்கு செல்கிறது. எனக்கு மூன்று இடங்களில் மூன்று வீடுகள் உள்ளன. பிரதான வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. மற்ற வீடுகள் வெடித்தன. நான் வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ. 63,000 என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டது. ஆனால் தோட்டத்தின் அடிப்பகுதியில் உள்ள சிறிய அறையின் மதிப்பு ரூபா 175. பெரிய வீட்டின் மதிப்பு ரூபா 120,000. இந்த மதிப்பீட்டைச் செய்ய அவர்கள் என்ன செய்தார்கள் என்பது இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், எங்களுக்கு எந்த மதிப்பீட்டு அறிக்கையும் கிடைக்கவில்லை. எனவே, இந்த இழப்பீடு எவ்வாறு மதிப்பிடப்பட்டது என்பதை இப்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரியுள்ளோம். என்றார்.
உதபெருவில் உள்ள ஜும்மா மசூதி இதேபோன்ற ஒரு ஆபத்தான பள்ளிவாசல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு தொழுகைகள் நடத்தப்படுகின்றன, சுமார் 150 பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. நஷ்ட ஈடாக பணம் கொடுத்தாலும் இன்னும் இதுவரையில் அதற்கான அனுமதி தரவில்லை என்கிறார் ஜே.சஹாப்தீன் தெரிவிக்கிறார்.
தற்போது கோலடென்னா மற்றும் ரிப்டன் எஸ்டேட் மக்களும் மரண பயத்தில் வாழ்கின்றனர். ஏனென்றால், அவர்களின் நிலங்கள் நிலச்சரிவு செய்யத் தொடங்கியுள்ளன. லேசான மழையில் தஞ்சம் புகுந்துகொள்ள அவர்கள் பல்லேபெருவே சமூக மண்டபத்திற்கு ஓடுகிறார்கள்.
பேரழிவு காரணமாக 22 வீடுகளை காலி செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்ல பிரதேச செயலகம் ரூ .1.6 இலட்சத்துக்கு 10 பெர்ச் நிலத்தை தேடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வீடு சாலையின் ஓரத்தில் அமைந்திருக்க வேண்டும் என்றும் பள்ளிகளும் வழிபாட்டுத் தலங்களும் அருகிலேயே அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற நிலங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று ரிப்டன் தோட்டத்தின் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டு திட்டத்தின் காரணமாக, இந்த மக்களின் வாழ்க்கை இன்னும் தலைகீழாக உள்ளது. இந்த பகுதிகளில் இன்னும் பலர் நிவாரணம் பெறவில்லை , இருப்பினும் ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் காரணமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அழகான பண்டாரவளை மாநகரப் பகுதி, இவ் உமா ஓயா வேலைத்திட்டத்தினால் பேரழிவை எதிர்நோக்கியுள்ளது. எத்தகையை சூழல் அறிக்கை, நில அறிக்கை ஆகியன கவனத்திற்கெடுக்காமல், அரசியல் ரீதியில், இவ் உமா ஓயா தட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுவிடயத்தில் , அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுத்தரல் வேண்டுமென்று, பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
உமா ஓயா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 29ஆந் திகதி பல்லாயிரம் பேர் கூடிய பாரிய போராட்டம், (உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு முன்னணியினால்) மேற்கொள்ளப்பட்டது. அப்போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது. இம் மக்கள் போராட்டத்தை, தடை செய்யக் கோரி பண்டாரவளைப் பொலிசார், நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்த போதிலும், மஜிஸ்ரேட் நீதிபதி தடை மனுவை நிராகரித்தார். இன, மத, கட்சிப் பேதமின்றி, சகல தரப்பினரும், இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் உமாஓயா திட்டத்தினால் 7037 வீடுகள் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளன. 3112 நீர் ஊற்றுக்கள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் முற்றாக வற்றியுள்ளன. விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் போன்ற வணக்கஸ்தலங்களும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
மக்கள் எதிர்ப்பினால், உமா ஓயா திட்டத்தினை நிறுத்துவதற்கும் அரசு தயாராக இல்லை. அதனை அரசு நிறுத்தினாலும், நிறுத்தாவிட்டாலும், ஏற்படு¬¬¬ம் பாதிப்புக்களும் மக்கள் எதிர்கொள்ளும் அனர்த்தங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகின்றதென்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்..
¬¬¬¬தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் வெறும் கனவாகவே போனது. உமா ஓயா திட்டம் விரைவில் நிறைவடைந்து வைபவ ரீதியில் திறக்கப்படும். குறித்தி திட்டத்தின் மூலம் பாய்ந்தோடும் நீரில் இங்கு வாழும் மக்களின் கண்ணீரும் கரைந்து போகும். இத்திட்டத்தின் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குரிய நிவாரணம்; அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :