புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அரசாங்கம் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவை பத்திரத்துக்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அரசியலமைப்பு நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
புதிய அரசியலமைப்பொன்று விரைவில் உருவாக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், தற்போது இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தின் வரைபும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது, குறித்த வரைபை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தின் வரைபை சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமூல வரைபை பரிசீலித்துவருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி, 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவுள்ளதாக, அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
எனினும், 19ஆவது திருத்தத்தில் காணப்படும் சில முக்கிய அம்சங்களை தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தின் வரைபு எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment