மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக விசேட செயலணி ஒன்றை அமைப்பதற்கு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகள் பல வருட காலமாக எவருக்கும் வழங்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இனியும் தாமதியாமல் இவ்வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்து கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, முன்னர் இவ்வீடுகளை பகிர்ந்தளிப்பதற்காக பயனாளிகள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும் அப்பயனாளிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் இந்நடவடிக்கை தடைப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, பொருத்தமான பயனாளிகளை தேர்வு செய்து, இவ்வீடுகளை கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக முன்னெடுக்கும் பொருட்டு விசேட செயலணி ஒன்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்த பேரழிவினால் மருதமுனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென மருதமுனை மேட்டு வட்டைப்பகுதியில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முற்றாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிகமாக குறித்த ஒரு தொகை வீடுகள் எஞ்சியிருக்கின்ற நிலையில், அவற்றை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் வறிய குடும்பத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும் இதுவரை எவருக்கும் அவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment