தனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது - ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

க.கிஷாந்தன்-

" நாடு மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிதாசன் நேற்று (29.10.2020) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு

" மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் வரவு - செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என நம்புகின்றேன். இந்தியாவும் உதவிகளை செய்ய உள்ளது." - என்று பதிலளித்தார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

அத்துடன், துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளித்த அவர்,

" பொதுமன்னிப்பு வழங்கக்கோரும் மனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை. ஏனெனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதலே தனி நபர்கள் தொடர்பில் காங்கிரஸ் முடிவுகளை எடுப்பதில்லை. நாடு மற்றும் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சட்டம் உள்ளது. எனவே, சட்டத்திற்கு புறம்பாக என்னால் எதையும் செய்ய முடியாது." - என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,

"கொரோனா வைரஸ் தாக்கத்தில் சந்திப்புகளை நடத்த முடியவில்லை. இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நேற்று கூட தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் கதைத்தேன். விரைவில் தீர்வு கிட்டும்." - என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :