மயில்வாகனம் உதயகுமார் எம்பியின் 20வது திருத்தம் மீதான உரை..

ல்லின மக்கள் வாழும் நாட்டில் இவ்வாறு ஒருவரிடத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படும் போது சட்டம் சகலருக்கும் சமமானது என்ற கோட்பாடு வெறும் எழுத்தில் மாத்திரமே இருக்கும் என்பது எனது கருத்து.

20 தாவது திருத்த சட்ட விவாத்த்தில் பாராளுமன்றத்தில் (21/10/2020)
நுவரெலிபா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ம.உதயகுமார்

கௌரவ சபாநாயகர் அவர்களே..

இன்று நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு விடயமாக கொரோனா தொற்று காணப்பட்டாலும் அரசாங்கத்தின் அவசரம் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் பேச வேண்டியுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு அளித்திருந்தது.

ஆனால் அரசியலமைப்பு கொண்டு வருவதை காலம் தாழ்த்திவிட்டு 20வது திருத்த சட்டமூலத்தை மிக அவசரமாகக் கொண்டு வந்துள்ளது.
தற்போதுள்ள அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 42 ஆண்டு காலத்திற்குள் 19 முறை திருத்தம் செய்யப்பட்டு 20வது திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. அதாவது சராசரியாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. எனவே தொடர்ந்து திருத்தம் செய்து கொண்டிருப்பதை விட புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதே மேலாகும்

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 20வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதை இந்த சபையிலே நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு இந்தளவு எதிர்ப்பு வரக் காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று ஆளும் அரசாங்கத்தில் உள்ள பிரபல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் 20வது திருத்தச் சட்டமூல முன்மொழிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த அரசாங்கத்தின் பிரதமர்கூட 20வது திருத்தச் சட்ட யோசனைகளை பரிசீலனை செய்ய குழுவொன்றை அமைத்தார். இன்னும் பலரது உள்ளக்குமுறல்களில் 20வது சட்டமூலத்திற்கான எதிர்ப்பு காணப்படுகிறது.

20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் பிரதமர், அமைச்சரவை, நீதிமன்றம், பாராளுமன்றம் போன்றவை பெயரளவு நிறுவனங்களாகவே காணப்படும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அத்தோடு பௌத்த மத மீடாதிபதிகள், கத்தோலிக்க பேரவைஇதனை எதிர்த்துள்ளது மட்டுமின்றி இது நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்லும் என எச்சரித்துள்ளனர்.மேலும் சிவில் சமுகம் மற்றும் பொது அமைப்புகளும் இதனை மீளப்பெறப்பட வேண்டுமேன வரியுறுத்தியுள்ளனர்.

20வது திருத்தச் சட்டமூல ஆவணம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அன்றே அங்கீகாரம் பெற்றது. பின் உடனடியாக வர்த்தமானியில் வெளியானது. அதனை தொடர்ந்து நீதி அமைச்சர் பாராளுமன்றில் சமர்பித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் 20வது திருத்த சட்டமூலத்தை தயாரித்தது யார் என்றே தெரியாமல் குழப்பம் நிலவுகிறது.

எனவே இந்தளவு குழப்பத்திற்கு மத்தியில் வந்துள்ள இந்த 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எமது தரப்பிலும் நாம் சில விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தில் மிகவும் முக்கிய வெற்றியாக கருதப்படும் தகவல் பெறும் உரிமை சட்ட ஏற்பாடுகளை இருந்தவாறு பேணுவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கத்திற்கு நன்றிகள். அதேபோன்று ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் ஜனாதிபதி இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்ற ஏற்பாடுகள் நீக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எனினும் இன்று பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் விடயங்கள் சிலவற்றை இந்த சபையில் கூற விரும்புகிறேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் 20வது திருத்தச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுக்கடங்காது அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேபோன்று நாட்டு மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றத்திற்கும் கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பறிக்கும் யாப்பு திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது.

பொதுத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடங்களின் பின் எந்த நேரத்திலும் பாராளுமன்றை கலைக்கலாம் என்ற ஏற்பாடு 20ம் திருத்தச் சட்டத்தில் உள்ளது. இதனால் ஒரு ஸ்திரமன்ற அரசாங்கம் உருவாக வாய்ப்பு உள்ளது. அடிக்கடி தேர்தல் வந்து செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் ஜனநாயக வாக்குரிமை கேலிக்குரியதாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டரை வருடங்களின் பின்னரே பாராளுமன்றை கலைக்க முடியும் என திருத்தம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்தபோது அரசியலமைப்பை மதித்து பாதுகாப்பதாகவும் பாராளுமன்றுக்கு பொறுப்புக் கூறுவதாகவும் அறிவித்துவிட்டு 20வது திருத்த சட்டமூலத்தில் அரசியலமைப்பை பாதுகாக்கும் கடப்பாட்டில் இருந்து விலகுவது மற்றும் பாராளுமன்றுக்கு பொறுப்பக்கூறத் தேவையில்லை என்ற ஏற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளமை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

ஜனாதிபதிக்கு எதிராக எவ்வித வழக்கு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது, ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைக் கூட தாக்கல் செய்ய முடியாது. இவ்வாறு ஜனாதிபதிக்கு அளவுகடந்த அதிகாரங்கள் 20ம் திருத்தத்தின் ஊடாக கிடைக்கிறது. எனினும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் இந்த சரத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை வரவேற்கக்கூடியதாகும்.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யக்கூடிய அரசியலமைப்புப் பேரவை பெயர் மாற்றம் செய்யப்பட்டு பாராளுமன்ற பேரவையாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பாராளுமன்ற பேரவை பெயரளவு அதிகாரம் கொண்ட ஒன்றாகும். வெறுமனே அவதானிப்புகளை மட்டுமே செய்யமுடியும். இதனால் நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை..

அரசிலயமைப்பு பேரவை உறுப்பினர்கள் தெரிவின்போது சிறுபான்மை கட்சி பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் பாராளுமன்றப் பேரவையில் அந்த ஏற்பாடு இல்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். சிறுபான்மையினரின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படும் ஏற்பாடாக நாம் இதனை பார்க்கிறோம். ஆகவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றிய ஒருவர் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது என்ற ஏற்பாடு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு விடுக்கப்படும் மிகப்பெரிய சவாலாகும். இதன்மூலம் ஜனாதிபதி தனது கட்சி சார்ந்த நபரை தேர்தல் திணைக்களத்திற்கு நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே பல்லின மக்கள் வாழும் நாட்டில் இவ்வாறு ஒருவரிடத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படும் போது சட்டம் சகலருக்கும் சமமானது என்ற கோட்பாடு வெறும் எழுத்தில் மாத்திரமே இருக்கும் என்பது எனது கருத்து.

எனவே இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் பொறுத்தமான, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய குறிப்பாக ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் எல்லா பிரிவு மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய மூன்று துறைகளாக சட்டத்துறை, நிர்வாகத்துறை, நிறைவேற்று அதிகாரத் துறை என்பன காணப்படுகின்றன. இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தக்கூடியதாக அல்லாமல் மூன்றும் இடையூறுகள் இன்றி ஜனநாயக கோட்பாடுகளை மதித்து சுதந்திரமாக செயற்படக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20வது யாப்பு திருத்த சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரமானது சட்டத்துறையாக நீதிமன்றத்தையும் நிர்வாகத்துறையான பாராளுமன்றத்தையும் கட்டுப்படுத்தி ஆளக்கூடிய நிலைமை உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நாட்டுக்கு அவசியமான அரசியலமைப்பு அனைவரின் ஒத்துழைப்பு பெற்று கொண்டு வரப்படவேண்டும்.
எனவே புதிய அரசியலமைப்பை்உருவாக்கி நாட்டில் சமத்துவம். சமவுரிமை பேணவும் மக்களின் இறையாண்மையை காக்கவும் நடவடிக்கை எடுக்கபடவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்பாகும்.
நன்றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :