கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலை - விம்பமும் யதார்த்தமும்

‘’இ
க்ரஹ் பிஸ்மிரப்பிகல் அலக்’’
 யாம் அனைவரும் அறிந்த அல்-குர் ஆன் வசனம். நான் பாடசாலை மாணவனாய் இருந்த சமயம் பாடசாலை இஸ்லாமிய தின நிகழ்வில் பிரதம அதிதியாய் வருகை தந்த ஓர் முஸ்லிம் அரசியல்வாதி தன் பேச்சை துவங்கியது இவ்வசனத்தை கொண்டே. அன்றைய உரையில் அவர் நல்லிணக்கத்தை பற்றியும் சிலாகித்து பேசியமை இன்றும் என்னால் நினைவு கூற முடிகிறது. அன்றைய அறியாமையின் பொருட்டு எம் சமூகத்தின் கல்வி நிலையை மிக உயரிய நிலையில் வைத்திருந்தேன். குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையை மிக உயரிய நிலையில் வைத்திருந்தேன்.
2012> தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி> கொழும்பில் சுமார் 242728 சோனகர்களும் 12463 மலே இன மக்களும் வாழ்கின்றனர். இன்று ஏறத்தாள முஸ்லிம் மக்களின் சனத்தொகை இரண்டரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

தலைநகரின் மூலை முடுக்கெல்லாம் முஸ்லிம் சமுகம் வியாபித்துள்ளது என்பது நூறு சதவீத உண்மை. ‘Colombo Telegraph’ பத்திரிகையில் 2015ல் வெளியிடப்பட்ட ஓர் செய்திக்கமைய சுமார் 63% சதவீத கொழும்பு முஸ்லிம் சனத்தொகை சேரிப்புwங்களில் வாழ்கின்றனர். எனவே எம் சமூகம் மூலைமுடுக்கு எங்கும் வியாபித்து இருப்பதில் வியப்பேதும் இல்லை. மேலும் கொழும்பின் 9% நிலப்பரப்பில் எம் சமூகம் வாழ்ந்து வருகிறது. அதிலும் பாதிக்கு மேல் வாடகை வீடுகளில் வாழ்வதாகவும் கட்டுரையாளர் லதீப் பாரூக் கோடிட்டு காட்டுகிறார். 

‘Centre for poverty analysis’ இனால் 2015ல் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பின்வரும் விடயம் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஓர் மாணவன்/மாணவியின் தரமான கல்வி நிலை பெறுவதற்கு அப்பிள்ளையின் குடும்ப நிலை வருமானம் சார்ந்துள்ள சூழல் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. இவ் ஆய்வின் ஊடு நோக்கின் 63% சேரிப்புற மக்களின் கல்வி நிலையை அனுமானிக்க முடியும். தலைநகர் கொழும்பில் பெயருக்கு பல புகழ் பூத்த முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. இன்றய முஸ்லிம்களின் கல்விமான்களில் பெரும்பாலானேர் அத்தகைய பாடசாலைளில் கற்றவர்களே.ஆனால் அத்தகைய நிலை இன்று இல்லாமை கவலைக்குரியது.

கொழும்பு முஸ்லிம்களின் கல்வியின் பார்வையை இரு வேறாக நோக்க முடியும். மேல் நடுத்தர வர்க்க மக்களின் பார்வையிலும் அடித்தட்டு மக்களின் பார்வையின் ஊடாகவும். முதல் வகை மக்கள் கல்வியின் தேவை அறிந்து க.பொ.த. சா/த உ/த முக்கியத்துவம் உணர்ந்து அதற்கு ஏற்ப செயற்படுகின்றனர். மாறாக சேரிப்புறங்களில் வாழும் மாணவர்களில் பெரும்பாலானோர் இப்பரீட்சைகளின் முக்கியத்துவம் உணர்வதில்லை. ஏன் உணர வேண்டும்? நம்முடைய அன்றாட தேவைகளை பசியை பேக்குவதே பிரம்ம பிரயத்தனமாய் இருக்க அம் மாணவனின் பார்வையில் கல்வியென்றும் ஓர் பொருட்டல்ல என எண்ணுவதில் வியப்பேதும் இல்லை.

இன்றைய இலங்கையில் கல்வி மட்டம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சி. அம்முன்னேற்றத்தில் எம் சமூக குறிப்பில் கொழும்பு மக்களின் பங்கு சற்று கவலைக்குரியது. இன்று மூன்றாம் வருட பல்கலைக்கழக மாணவனாய் இருக்கும் நான் இது வரை எம் மஜ்லிஸால் நிகழ்த்தப்பட்ட பல கல்விக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளேன்.

அக்கருத்தரங்குகளில் பல இத்தகைய சேரிப்புற முஸ்லிம் பாடசாலைகளை மையமாய் வைத்தே நிகழ்வது வழமை. அதில் நான் கண்ட உணர்ந்த உண்மை தம் அன்றாட வாழ்வே ஓர் பேராட்டமாய் கழிந்து கொண்டிருக்க அப்போராட்டத்தை சமாளிப்பதே முழு நாளின் வேலையாய் பல மாணவர்களின் வாழ்வு கழிகிறது. இவ்வாழ்வின் இடையே பாடசாலை எனும் இடைவேளை. இந்நிலையே பற்பல மாணவர்களின் வாழ்க்கை. இதுவே யாதார்த்த நிலை.

மிக அண்மையில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கு ஒன்று இத்தகைய மிகவும் பின் தங்கியதோர் முஸ்லிம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்டது. அப்பாடசாலையில் நாம் நேரில் கண்ட உண்மை அவ்வருடம் க.பொ.த. சா/த எழுதவிருக்கும் மாணவர்களில் பலர் அடிப்படை கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் குறியீடுகளையேனும் அறிந்திருக்கவில்லை. இந்நிலை கொழும்பிலுள்ள பல பாடசாலைகளுக்கும் பொருந்துவதே வேதனைக்குரியது.

இத்தகைய பிறிதோர் பாடசாலையில் கடந்த பல வருடங்களாக ஓர் மாணவரேனும் உ/த தகுதியடையவில்லை என்று பாடசாலை அதிபர் கூறி வருத்தமடைந்த நிகழ்வும் உண்டு.

பல்கலைக்கழக மாணவர்களினால் எம் மஜ்லிஸ் பல சமூக சேவை நிகழ்வுகளை ஒழுங்கு செய்தாலும் இந்நிலையை மாற்றுவதற்கு எமது பங்களிப்பு சிறிதளவேனும் போதாது. இந்நிலையை மாற்ற எவறாவது மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்டா?

முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளின் கையாலாகாதனம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அது தவிர முஸ்லிம் சமூகத்தின் உள்ளேயே எண்ணற்ற வளமுடைய சமூக சேவை நோக்குள்ள இயக்கங்கள் உள்ளன. அத்தகைய இயக்கங்களும் அரசியல் தலைமைகளும் கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் எண்ணற்ற கூட்டங்களும் கலந்துரையாடல்களும் இரகசிய பேச்சுவார்த்தைகளும், எதிர்கால திட்டங்களும் வகுத்தமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய பேச்சுக்களிலும் திட்டங்களிலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களை நோக்காமல் போயின என்பதை மிகப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

இன்று 11ம் ஆண்டு சா/த எழுதும் மாணவனுக்கு கூட்டல், கழித்தல் அடையாளம் தெரியவில்லை. திண்ணமாய் 9,10 கற்கும் பலருக்கும் அவ்வடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை அதை தெரிய வைக்கவும் எம் சமூகமோ புத்திஜீவிகள் அமைப்போ தயாரில்லை. ஏப்ரல் பிரச்சனையை அடுத்து முஸ்லிம் தனவந்தர்கள் எண்ணற்றோர் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தம்மால் இயன்ற பொருளுதவிகளை அளித்துள்ளனர்.

அத்தகைய தனவந்தர்களுக்கு சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து இன்றைய அபாய நிலையை உணர்த்தியவர்கள் ஏன் அடித்தட்டு மக்களின் கல்வி நிலையை முன்னேற்ற உதவி கோரவில்லை எனும் கேள்வி இயற்கையில் எழுகிறது.

இனியும் நாம் ஏதேனுமோர் செயற்திட்டம் நிகழ்த்தி அத்திவாரத்தை கல்வியை கொண்டு செப்பனிடவில்லையெனின் மேலும் பிரச்சினைகளை முகம் கொள்ள எம்மவர்கள் தயாராகிக் கொள்வது நலம்.

"வழித்தடம்" - All University Muslim Student Association
M.A.M.Simak
University of Kelaniya
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :