ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காமல், அரச இயந்திரங்களால் நகரமுடியாதுள்ளது: சட்டத்தரணி முஷாரப் (பா.உ)


இர்ஷாத் ஜமால்-

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சீனா நிதி உதவி செய்துள்ளது. அது நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளதா? அல்லது கடனாக வழங்கப்பட்டுள்ளதா?. கடனாயின் அதற்கான நிபந்தனைகள் என்ன?. இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அடையப்போகும் அடைவுகள் என்ன?. என்ற கேள்விகளை சபைக்கு முன்வைத்தார். 20.10.2020 செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே குறித்த வினாக்களை முன்வைத்துள்ளார்.

மஞ்சள் இறக்குமதி தொடர்பான தடை, மஞ்சள் மாபியாவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான விடயங்களை புறம்தள்ளிவிட்டு அரசும், அரச இயந்திரங்களும் மற்றும் ஊடகங்களும் ஒரே ஒரு விடயத்தை பூதாகரமாக காண்பித்து வருகின்றது.

ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காமல், அவரைப் பற்றி பேசாமல் இந்த நாட்டின் அரச இயந்திரம் நகர முடியாது உள்ளது.
உலகின் எந்த தலைவரதும் நாமம் உச்சரிக்க படாத அளவில் ரிஷாட் அவர்களின் நாமம் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது, எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் எது நிகழ்ந்தாலும் ரிஷாட் பதியுதீன் என்கின்ற நாமத்தை உச்சரித்து தான் நகர்வதை பார்க்கின்றோம். அரசியல் மாற்றம் என்றாலும் அது அவர் பெயரிலேயே நடைபெறுகின்றது.

1990ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து ஓரிரு மணித்தியாலங்களில் விடுதலைப்புலிகளினால் விரட்டி அடிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களினது வாழ்வாதாரத்தை உருவாக்குவதிலோ அல்லது அவர்களுக்கான மீள்குடியேற்றத்தை செய்து கொடுப்பதிலோ எந்த அரசாங்கமும் முன்னிற்கவில்லை.

அந்த அனாதைச் சமுகத்தில் இருந்து வந்த ரிஷாட் பதியுதீன் அவர்கள்,அம்மக்களினது துயரங்களையும், துன்பகளையும் நன்கு உணர்ந்தவர் என்ற காரணத்தினால் தன்னாலானவற்றை செய்து கொடுத்தார். வெளிநாடுகளின் உதவிகளை பெற்று பல்லாயிரக்கணக்கான வீடுகள், பாடசாலைகள், கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அன்றுதொட்டு இன்றுவரை அவர் முழுக்க விமர்சிக்கப் படுவதற்கான காரணம் அம்மக்களுக்காக தன்னை அர்ப்பணம் செய்ததை தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இவைகளை செய்து கொடுக்காத அரசாங்கங்களுக்கு, அம்மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் கடப்பாடு இருந்தும் கூட அவர்களுக்காக அதை செய்து கொடுக்க முன்வரவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அம்மக்கள் வேண்டிக் கொண்டதற்கு அமைவாக நீண்டகால இடம்பெயர்ந்தோர்களுக்கான அமைச்சுப் பொறுப்பை வகித்த ரிஷாட் பதியுதீன் அவர்கள் அந்த மக்களுக்கான வாக்களிக்கும் வசதிகளை செய்து கொடுத்தார்.

அப்போதிருந்த பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு இது விடயத்தை தெரியப்படுத்திய அவர் அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டார். அரசாங்கத்தின் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து, அரசாங்கத்தின் பிறிதொரு சபையான இலங்கை போக்குவரத்துச் சபைக்கே குறித்த நிதி கைமாறப்பட்டதே தவிர, ரிஷாட் பதியுதீன் அவர்கள் தனது பக்கட்டுகளுக்குள் போடவில்லை.

பின்னர் குறித்த தொகைப் பணமானது, அச்சமூகத்தின் புலம்பெயர் அமைப்பினால் செலுத்தப்பட்டது.

இதனை குற்றமாக காண்பித்து ரிசார்ட் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவரது கைதானது ஏதோவொரு மிகப்பெரும் குற்றவாளியை அல்லது சர்வதேச பயங்கரவாதியை, பாரிய தேடுதல் வேட்டையின் பின்னர் கைது செய்ததை போன்றதொரு தோற்றப்பாடு இந்த நாட்டில் காண்பிக்கப்படுகிறது.

இவ்வாறான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுகின்ற போது நாட்டில் பேசப்பட வேண்டிய 20ஆவது திருத்தச்சட்டம், இறக்குமதிக்கான தடை, covid-19 போன்ற மிக முக்கிய விடயங்கள் பேசப்படாமலே செல்கின்றன.

ரிஷாட் பதியுதீன்அவர்களை பேசுபொருளாக காண்பித்து இவ்வாறான விடயங்களில் இருந்து அரசுகள் தங்களது காய்களை நகர்த்திச் செல்வதை மிகவும் வேதனையுடன் பார்க்கின்றேன்.

நாட்டின் அபிவிருத்தி பற்றி பேசுவதற்கும்,சிந்திப்பதற்கும் பல்வேறு விடயங்கள் இருந்த போதிலும், ஒரே ஒரு நபரை சுற்றியே இந்தப் பாராளுமன்றமும், அரசாங்கமும் பேசுவதும், அரசாங்கத்தின் இயந்திரங்களும் அவரைச் சுற்றியே நகர்ந்து செல்வதும் வேதனை அளிக்கிறது.

இந்தப் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக அவருக்குள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி கடிதம் மூலம் சபாநாயகர் அழைப்பு விடுத்தும் கூட PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற காரணம் கூறப்பட்டு, பாராளுமன்றத்திற்கு வரத் தயாராக இருந்த எமது தலைவர் வரவில்லை.

PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு PCR பரிசோதனை செய்யவேண்டும் என்று கூற வேண்டிய அவசியமில்லை. "இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனைகளில் எமக்கு சந்தேகம் உள்ளது" என்ற மருத்துவ சங்கத்தின் தலைமை செயலாளரின் கூற்றை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்குள்ள சிறப்புரிமையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கௌரவ சபாநாயகர் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :