முற்றுப்புள்ளி இல்லாத பிரச்சினையாக இலங்கையின் வறுமை நிலை...


லங்கையில் மற்றைய சமூகத்தினரை விட முஸ்லிம் சமூகமே கல்வி,பொருளாதாரம், சுகாதாரம் போன்ற விடயங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது அத்தோடு எமது சமூகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஒரு பாரிய சவாலாகவும் முட்டுக் கட்டையாகவும் காணப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமையாகும்.

வறிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என்று எத்தனையோ ஒன்றுகூடலும் மாநாடுகளும் ஆங்காங்கே இடம் பெற்றாலும் இறுதியில் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பேச்சுப் பொருளாக மட்டுமே இருந்து விட்டு மறைந்து விடுகின்றன இதனால் எமது சமூகத்தில் இன்று வறுமைக்கோட்டின் கீழ் கிட்டத்தட்ட 500,000 {25%} மக்கள் வாழ்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எமது சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் தர்மம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் நமது சமூகத்தில் உள்ள பாரியதொரு பிரச்சினைதான், தேவைகளை அறிந்து முன்னுரிமை படுத்தப்படாமையும் ஸகாத் பணத்தை வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க போதுமான பணத்தை வழங்காமல் ஒரு சிறு தொகை கொடுப்படுவதாகும். 

அப்பணம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலமைகளினால் ஸகாத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படாமல் செல்கின்றது.மேலும், ஸகாத் பணங்கள் மத்ரசாக்களுக்கும், அது போன்று இயங்கும் ஏனைய அமைப்புக்களுக்கு கொடுக்கப்படுவதாலும்.ஸகாத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகின்றது.

பெருந்தொகையான ஸதகா பணங்கள் மத்ரசாக்களின் நிர்வாக செலவிற்கும், மத்ரசா கட்டிடங்களை அமைப்பதற்கும், மஸ்ஜித் கட்டுவதற்கும், மஸ்ஜித் புனர்நிர்மாணங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட பிரதான காரணங்களால், வறிய மக்களுக்கு உதவிகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஸகாத், ஸதகா இரண்டிலும் வறிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வறுமையில் வாழும் மக்கள் மூன்று வேளை உணவைக்கூட பெறமுடியாதநிலையில் உள்ளனர். 

காலை உணவின்றி பாடசாலை செல்லும் சிறார்களை இன்று பரவலாக காணக்கூடியதாக உள்ளதோடு, போஷாக்கு குறைவினால் பாதிக்கப்பட்டும், கல்வியில் பின்தங்கிய நிலையிலும் இவர்கள் காணப்படுகின்றன.

குடும்பத்தின் வறுமை நிலமை காரணமாக பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுவிட்டு சிறார்கள் முழு நேர தொழிலுக்காக செல்ல வேண்டிய நிலமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனை எமது வியாபாரிகளும், தொழிலதிபர்களும் தங்களுக்கு சார்பாக பயன்படுத்தி மிகக் குறைந்த தொகையை சம்பளமாக வழங்கி இந்த அப்பாவி சிறார்களை ஏமாற்றுகின்றனர்.

முஸ்லிம் சமூகம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்த நிலைக்கு பிரதான காரணமாக இருப்பது வறுமையாகும். கல்வியில் இப்படியான பின்னடைவு, எதிர்கால சந்ததியை பெரிதும் பாதிப்பதோடு, நமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அநியாயமும், துரோகமுமாகும்.

இவ்வாறு பிரதான உணவிற்கே தடுமாறும் இப்படிப்பட்ட குடும்பங்களில் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் இவர்களின் நிலமை மேலும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றது. வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கான செலவு, வைத்திய செலவு என மேலும் கஷ்டமான நிலமைக்கு தள்ளப்படுகின்றனர். இதிலும் பெண்களினால் நிர்வகிக்கப்படும் குடும்பங்களின் நிலமை மிகவும் பரிதாபமானதாகும். 

அதுமட்டுமன்றி பொருளாதார நிலமை காரணமாக இவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டியே நிலையில் உள்ளதால், மேலும் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நோன்பு காலங்களிலும், தேர்தல் காலங்களிலும், இயற்கை அணர்த்தங்களின்போதும், செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும், சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவணங்களும், சில உதவிகளை செய்துவிட்டு, இணையத்தில் சில புகைப்படங்களையும் பதிவுசெய்துவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர்.

 மற்றைய காலங்களில் இந்த வறிய மக்கள் எவ்வாறு தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்றார்கள், என்று சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. 

அல்லாஹ் நமது சமூகத்தினரின் ஒரு பகுதியினருக்கு எல்லா வகை யான வசதிகளை வளங்கியுள்ள போதும் இவற்றை கிடைக்கப் பெற்றவர்களின் சுயநலம் காரணமாக, எமது உறவுகள் இவ்வாறு பின்தங்கிய நிலையில் வாழ்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எமது உறவுகள் வாடகை வீடுகளில் வசித்துக் கொண்டும், உண்ண உணவின்றியும், வைத்திய செலவுக்கு பணமின்றியும், தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைப் பெற எந்தவித வழியுமின்றி அதற்காக கடன்வாங்கியும், சமுர்தியிலும் வங்கிகளிலும் வட்டிக்கு பணம் பெற்று வாழுகின்றனர்.

இவர்களின் நிலமைகளை மாற்ற நாம் முன்வராதவரை, எவ்வாறு நாங்கள் முஸ்லிம்கள் என்று கூற முடியும். ஒரு உண்மையான முஸ்லிம் தலைமத்துவமும், உண்மையான முஸ்லிம்களும் இவ்வாறான நிலையில் தமது உறவுகள் வாழ்வதை ஏற்றுக் கொள்வார்களா?. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டுதானே எம் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டாடிருக்கின்றோம்.

வறிய மக்களின் வீடுகளுக்கு சென்று பாருங்கள். உங்கள் அனைவருக்கும் அவர்களின் உண்மை நிலமை புரியும். எமது சமூகத்தில் வறிய மக்கள் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
சமூகத்தின் இந்த நிலமைக்கு பிரதான காரணம், எங்களுக்கு இறைவன் கொடுத்த பொருளாதாரம் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம், நாங்கள் ஏன் வறியவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்களும், நிர்வாகம் தெரியாத எமது தலைமத்துவமும் தான். 

நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்களை வறிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் சமூகத்தின் குறைகளையும், அநாச்சாரங்களையும் பேசுவதிலேயே காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றோம்.

 தங்களது செல்வங்களை பூட்டிவைத்துக்கொண்டும், வெளிநாட்டு சுற்றுலாக்களிலும், செய்த பாவங்களை அழிப்பதற்கு உம்றாக்களை அடுக்கிக் கொண்டும் செல்லும் தலைவர்கள் சமூகத்தை தலமைதாங்குவதற்கும், பள்ளிவாயல்களை நிர்வகிப்பதற்கும் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கும் எந்த அருகதையும் அற்றவர்கள். 

எமது தனவந்தர்கள் தங்களது செல்வங்களில் ஒரு தொகையை நியாயமான முறையில் வறிய மக்களுக்காக கொடுத்து உதவியிருப்பார்களாயின் ஏன் இன்று எமது நாட்டில் 25% முஸ்லிம்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ வேண்டும்.

மஸ்ஜித்கள் பைத்துல்மால்களை அமைக்க முன்வர வேண்டும். பைத்துல்மால் என்பது மக்களுக்கான பொது நிதியமாகும். இந்நிதியம் நபியவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் அமுலில் இருந்து வந்துள்ளது. இந்நிதியத்திற்கு யாரும் எவ்வளவையும் அன்பளிப்பு செய்யமுடியும்.

அந்நிதியிலிருந்து தேவையுள்ள யாவருக்கும் உதவி வழங்கப்படும். கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது வயது முதிர்ந்த ஒரு யூதர் யாசிப்பதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் அவரை அழைத்து இனிமேல் யாசிக்க வேண்டாம் எனக் கூறி பைத்துல்மாலில் இருந்து மாதாந்தம் ஒரு தொகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள்.

ஸகாத் கொடுப்போரும், ஸகாத் வழங்க வசதியற்றோரும் எப்பொருளையும் பைத்துல் மாலுக்கு வழங்க முடியும்.

 அதே போன்று தேவையுள்ள யாரும் அதிலிருந்து உதவித் தொகையினை அல்லது வேறு வகையாக உதவியினை பெற்றுக் கொள்ள இது வாய்ப்பாக அமையும். எனவே, “பைத்துல் ஸகாத்” நிதியம் போன்று “பைத்துல்மால்” நிதியம் ஒவ்வொரு பள்ளிவாயலிலும் அமைக்கப்பட வேண்டும். நபியவர்களின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவி எவ்வாறு மக்கள் சேவை மையமாக இயங்கியதோ அவ்வாறே எமது பள்ளிவாசல்களும் இயங்க முன்வர வேண்டும்.

வறுமையை ஒழிக்க எமது தலைவர்கள் மிக விரைவில் எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் இதே நிலை தொடருமாக இருந்தால் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரிப்பதோடு குற்றச் செயல்களும் அதிகரிக்க இந்நிலைமை வழிவகுக்கும் அத்தோடு "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்று நம் முன்னோர்கள் வறுமையின் கொடுமையை நமக்கு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதையும் நாம் அடிக்கடி மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :