உபி - தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டம்-படங்கள்


பி.எஸ்.ஐ.கனி
சென்னை உ.பி யில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலை கண்டித்தும் , பாப்புலர் ஃப்ரண்டின் மீது அவதூறுகளை பரப்பும் உ.பி அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்ற நிலையில் , பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டம் சார்பாக இன்று 09.10.2020 , மாலை 4.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் தலைமை தாங்கினார்.

சென்னை மண்டல செயலாளர் அஹமத் மொய்தீன் , வடசென்னை மாவட்ட தலைவர் பக்கீர் முஹம்மத், எஸ்டிபிஐ வர்த்தக அணி தலைவர் முகைதீன், எஸ்டிபிஐ மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் அஹமத் அலி வரவேற்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மண்டல தலைவர் டாக்டர். மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அ.ச.உமர் ஃபாரூக், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டல தலைவர் டாக்டர் ஆபிருதீன் பேசுகையில்,

உ.பி மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 4 ம் தேதி, ஆதிக்க சாதி வெறியர்களால் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . 

இக்கொடூர செயலை பாப்புலர் ஃப்ரண்ட்டும் வன்மையாக கண்டித்தது . பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உ.பி யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்கவிட்டு காட்டுதார்பார் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் . உ.பி யில் இதுவரை சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்த நிலையில் தற்போது தலித்களும் , பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்பதற்கு உ.பி யில் நடக்கும் சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றது . பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை தண்டிக்காமல் அவர்களை காப்பாற்றும் நோக்கில் யோகி அரசும் அதன் கைப்பாவையாக செயல்படும் உ.பி மாநில காவல்துறையும் செயல்பட்டு வருகின்றனர் .

கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டி குரல் கொடுத்த ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறையை ஏவுவதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட அனுமதிக்காமல் சந்திக்க வருபவர்களை உ.பி அரசு கைதும் செய்து வருகிறது . உ.பி அரசுக்கு எதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்பும் விதமாக மீண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறுகளை பரப்புவதோடு வகுப்புவாத வன்முறையை தூண்ட சதி என்று குற்றம் சாட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஐ தொடர்பு படுத்தவும் முயற்சிக்கின்றது .

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சந்திக்க சென்ற 4 நபர்களை வழியில் வைத்து கைது செய்ததன் மூலம் ஒரு பரபரப்பான செய்தி உருவாக்கப்பட்டது . கைது செய்யப்பட்ட 4 பேர்களில் 2 பேர் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் தலைவர்கள் ஆவர். மற்றொருவர் சித்தீக் காப்பன். இவர் பத்திரிகையாளரும், கேரளா யூனியன் ஆஃப் வர்கிங் ஜர்னலிஸ்ட் என்ற அமைப்பின் செயலாளரும் ஆவார். அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பு சட்ட விரோத கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது .

இந்த கைதுகள் உ.பி யில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க நினைப்பதை கூட ஒரு குற்றம் என்பதாக நிரூபிக்கிறது . கைது நடவடிக்கைகளுக்கு பின்னர் யோகி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி முதல் சர்வதேச சதி வரையிலான புதிய கதைகள் புனையப்பட்டன . சி.ஏ ஏவுக்கு எதிரான போராட்டத்தின்போது உ.பி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்டின் உ.பி மாநில தற்காலிக குழுவின் தலைவர்கள் மீது வன்முறையை தூண்டிய சூத்திரதாரிகள் என்று குற்றம் சாட்டியிருந்தனர் . ஆனால் , நீதிமன்றத்தில் அவர்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் மோசமாக தோல்வியடைந்தனர் . இதனால் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

டெல்லி கலவரத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பிருப்பதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டில் கூட டெல்லி காவல்துறை அவமானத்தையே சந்தித்தது . டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட 2 தலைவர்களை நீதிமன்றம் 1 நாளுக்குள் விடுவித்தது . தற்போது வரை பாப்புலர் ஃப்ரண்டுடன் தொடர்புடைய யாரும் டெல்லியிலோ அல்லது உ.பி.யிலோ நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்படவில்லை . அனைத்து குற்றச்சாட்டுகளும் புனையப்பட்டது என்பதற்கு இது ஒரு சான்று .

மிகையாக விளம்பரப்படுத்தப்படும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையின் கண்டுபிடிப்புகள் கூட பெயரிடப்படாத துண்டு பேப்பர்களாகவே மாறின . அவற்றில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை . பாஜ.க அரசால் இயக்கப்படும் ஏஜன்சிகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தவே முயன்றன . ஆனால் , அவை அனைத்தும் திசை திருப்பும் தந்திரங்களாக மாறிவிட்டன .தற்போதைய குற்றச்சாட்டுகள் உபி அரசின் முகத்தை காப்பாற்ற முயலும் மத்திய அரசால் இயக்கப்படும் ஏஜென்சிகளின் தயாரிப்பு ஆகும். முந்தைய முடிவுகளைப் போலவே இந்த புதிய அவதூறான மற்றும் கற்பனையான அவமானகரமான தோல்வியை தழுவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் .

துரதிருஷ்டவசமாக இந்த குற்றச்சாட்டுக்களை பரபரப்பாக வெளியிடும் ஊடகங்கள் அவை போலியானதாக மாறும் போது அமைதியாகிவிடுகின்றன .

உபி காவல்துறை தனது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறும் போது ஊடகங்கள் மாறுபட்ட எதிர்வினையையே காட்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் .
என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு யோகி அரசுக்கு எதிராக கண்டன கோசம் எழுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :