ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்பியாக ரணில்- கட்சியில் இருந்து வெளியேறுகிறார் அகிலவிராஜ்!

டந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இன்று (23) காலை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் 19 பேரில், தமது விருப்பத்தை வெளியிட்டு 13 பேர் கையொப்பமிட்ட கடிதமொன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையோரின் கையொப்பத்தை பெற்று, கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தன மூலம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எம்.பி. பதவியை முன்னாள் சிரேஷ்ட எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, வஜிர அபேவர்தன அல்லது ருவன் விஜேவர்தன ஏற்க வேண்டும் என பரிந்துரைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், குறித்த தேசியப் பட்டியல் உறுப்புரிமையை ஏற்குமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் விக்ரமசிங்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15% இற்கும் குறைவான வாக்குகளையே ஐ.தே.க. பெற்றது. அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மொத்தமாக 249,435 வாக்குகளே கிடைக்கப் பெற்றது.

பல தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க (2015இல் 500,566 வாக்குகள்), இம்முறை அக்கட்சி நாட்டின் எந்தவொரு தேர்தல் மாட்டத்திலும் எவ்வித ஆசனங்களையும் கைப்பற்றாத நிலையில், தோல்வியைத் தழுவியிருந்தார். (இம்முறை குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகக் கூடுதலாக 527,364 வாக்குகளை பெற்றிருந்தார்)

ஐ.தே.க. எவ்வித ஆசனங்களையும் கைப்பற்றாததன் காரணமாக, கடந்த தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணும் தேவையேற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமை இன்னும் ஏற்கவில்லை என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலுக்கு முன்னர், மார்ச் மாதமளவில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்த போதிலும், தொடர்ந்தும் அவர் அப்பதவியில் நீடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :