தனிமைப்படுத்தல் சட்டம் இன்றுமுதல் தனித்துவமாகின்றது!

வி.ரி.சகாதேவராஜா-


சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற நச்சுயிரி வைரஸானது முழு உலகத்தையும் ஆட்டிப் படைத்துகொண்டிருக்கின்றது. உலகில் 5கோடி மக்கள் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தொற்றுக்களின் அடிப்படையில் அமெரிக்கா 1கோடி என்ற எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இந்தியா பிரேசில் ரஷ்யா பிரான்ஸ் ஸ்பெயின் என பட்டியல் நீளுகின்றது.சுமார் 12லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை சுமார் 13ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 34பேர் மரணமாயுள்ளனர்.வெளிநாடுளில் 90இலங்கையர்கள் மரணமாயுள்ள செய்தியும் வெளிவந்துள்ளது. .குறிப்பாக சவுதிஅரேபியாவில் 31பேரும் குவைத்தில் 20பேரும் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் நாளுக்குநாள் தொற்றுக்களின் எண்ணிக்கையும் பலியுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுசெல்கிறது. இந்நிலையில் நாட்டை திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை இன்று திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் நாட்டின் 55 துறைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல் தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டில் வைரஸ் பரவல் மூன்றாவது மட்டத்திலுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின் நிறுவனங்கள் செயற்படவேண்டிய முறைகள் தொடர்பில் வழிகாட்டல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேற்படி வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் அல்லது அனுமதி பெற்றுக் கொண்ட செயற்பாடுகள் அல்லாத செயற்பாடுகளுக்காக ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

புதிய வழிகாட்டலின்படி பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் டியூஷன் வகுப்புகள்சினிமா தியேட்டர்கள் சிறுவர் பூங்காக்கள் மிருகக்காட்சி சாலை கசினோ இரவு களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட சமூக மத்திய நிலையங்கள் ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

வீடுகளில் மற்றும் திறந்த வெளிகளில் நடத்தப்படும் உற்சவங்கள் களியாட்ட நிகழ்வுகள் இசைக் கச்சேரிகள்கடற்கரை நிகழ்வுகள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டபோதும் நபர்களுக்கான இடைவெளி 1.5 மீற்றராக இருப்பது அவசியம். எனினும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் குறிப்பிட்ட இடத்தின் இட வசதிக்கேற்ப 50 வீதமாக மட்டுப் படுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்துகளில் வாகனத்தின் கொள்ளளவுக் கேற்ப எழுபத்தைந்து வீதமான பயணிகளே அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் தனியார் வாடகைக் கார் அல்லது முச்சக்கர வண்டிகளில் ஒரே தடவையில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்துவதுடன் பெரும்பாலும் வீடுகளிலிருந்தே வேலை செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

திருமண நிகழ்வுகள் 50 பேரின் பங்குபற்றுதலுடன் மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பதுடன் மரணச் சடங்குகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

சமய வழிபாட்டுத் தலங்களில் ஒரு தடவையில் 25 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். எவ்வாறாயினும் அத்தகைய இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் செயற்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என்றும் சுகாதார அமைச்சின் மேற்படி வழிகாட்டல் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை ஆகியனவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொரோனா தொற்றுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் நோய்த் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 262 சரத்தின் பிரகாரம் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட முடியும் என அவர் தெரிவித்தார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே நோய்த் தொற்றை ஒருவர் பரப்பினால் குற்றவியல் சட்டத்தின் 263ம் சரத்தின் அடிப்படையில் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றைத் திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பி அதனால் ஒருவர் உயிரிழந்தால் குற்றவியல் சட்டத்தின் 298ம் சரத்தின் பிரகாரம் ஐந் தாண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடுபூராக விஸ்தரிப்பு.

இதேவேளை கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொவிட்-19 தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்றுநிரூபத்திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத்சமரவீர தெரிவித்தார்.

கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் செயல்முறை இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத்சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா இன்னும் பலவருடங்கள் எம்முடன் வாழத்தான்போகின்றது. எனவே முடக்கல் நிலையை பலவருடங்களுக்கு நீடிக்கலாமா? இல்லை எனவே கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ளவேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையில் அரசாங்கம் பயணிக்கின்றது.
எனவே பொதுமக்கள் தங்கள் தங்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ளவேண்டியவர்களாகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :