பகுதி-02
சிவில் சமூகம் என்பதே ஒரு சமூகத்தின் கண்ணும் காதும் மனச்சாட்சியுமாகும். அச்சிவில் சமூகமானது அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக , சமூகத்தினை மேலாண்மை செய்து தமது அதிகாரத்தினை நிலை நிறுத்த உருவாக்கப்படுவதல்ல. குறுக்கு வழிகளில் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் அதிகாரப் போட்டிக்குள் சிக்குண்டு தம்மை அடகு வைப்பதுமல்ல. அது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைப்பாக்கம் செய்து , இயங்கியலின் வழியாக நிதமும் தம்மை புதுப்பித்து மக்களின் குரலாக சுதந்திரமாக நின்று ஒலிக்கக் கூடியது.
ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் , வளர்ச்சி அடைந்திருக்கும் சமூகங்களுக்குள்ளேயே அதன் வலுவையும், அதன் ஆன்மாவையும் கட்டிக்காக்க சிவில் சமூகம் மிகத் தேவையாக இருக்கின்ற போது , ஒடுக்கப்படுகின்ற, சொந்த அரசியல் தலைமைகளே வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்ற , அவர்களது அபிலாசைகளை தமது தனிப்பட்ட நலன்களுக்காக மொத்தமாகவும், சில்லறையாகவும் கூவி விற்கின்ற, மக்களை நட்டாற்றில் கைவிட்ட சமூக நிலைமைகளில் , இப்படியான சமூகங்களின் மத்தியில் சிவில் சமூகத்தின் பாத்திரமும் பணியும் மிக மிக முக்கியமானதும் இன்றியமையாததுமாகும்.
தேர்தல்கள் வந்தால் புற்றீசல்கள் போல் வெளிக்கிட்டு , வேசம் காட்டி , தம் அதிகார சொகுசுக்காக அரசியல் கடை நடாத்தும் இந்த முஸ்லிம் தலைவர்களையும், அதன் பிரதிநிதிகளையும் , முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படும் நிலையில் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. இன்று முஸ்லிம்களுக்குள் உள்ள கட்சிகள் எங்கே? அதன் தலைவர்கள் எங்கே என மக்கள் தேட வேண்டியும் இருக்கிறது. மக்களை ஏமாற்ற கொடுத்த வாக்குறுதிகள், ஒடுக்குமுறை அரசின் அதிகாரத்தின் முன்னால் சின்னாபின்னமாகி, நடைப்பிணமாய் இத்தலைவர்களையும், அவர்தம் பிரதி நிதிகளையும் பதட்டத்திற்குள்ளாகி நிலைமாற வைத்திருக்கிறது.
இந்த கட்சிகள் தொடர்பான நடைமுறைசார்ந்த உண்மைகள் வாக்காளர்களின் கண்ணை ஓரளவு திறக்கத் தொடங்கி உள்ளது. இந்த கைசேத நிலையிலும், இந்த மாறும் புள்ளியிலும்தான் இலங்கை முஸ்லிம் சிவில் சமூகம் தன்னை நிலை நிறுத்த முன் செல்ல வேண்டும். அதன் சமூக, அரசியல் குரல்களும் , ஒடுக்குமுறைக்கெதிரான அதன் வீறார்ந்த இருப்பின் உயிர்ப்பும் முன்கையெடுக்க வேண்டிய நேரம் இது.
ஆனால் இன்றைய முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்கிற ஒரு வினாவை முன் எழுப்பி பார்த்தால், அப்படியான பலமான ஒரு சிவில் சமூகம் அமைப்பாக்கம் பெற்று நமக்கு முன் இருக்கிறதா என்கிற கேள்வியை மறுவளமாகத் திருப்பி , நமக்கு நாமே கேட்க வேண்டியவர்களாவே இருக்கிறோம்.
மிகப் பலவீனமான நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய தன்னிலை சார்ந்த சுயமதிப்பீடும், வெறும் உணர்ச்சி நிலையும் உண்மையைத் தரிசிப்பதற்கான வாசல்களை அடைத்து நிற்க, காலம் பிந்தியும் மேலும் மேலும் இத்தகைய பின்னடைவு நிலைக்கு, சமூக இயக்கமற்ற தன்மைக்கு அனுமதிக்காதீர்கள் என்பதே இன்றைய நிலையில் சொல்லக்கூடியது.
முஸ்லிம் சமூகத்திற்குள் பெயரளவில் இருக்கின்ற சிவில் சமூகம் சார்ந்த பல பொது அமைப்புகள் கட்சிகள் சார்ந்து இருக்கின்றன, அல்லது அதன் நலன்களுக்கு துணை போகின்றன. ஆட்சியாளர்களினதும் அதிகாரத்தரப்பினரினதும் மனம் கோனாவண்ணம் சூதானமாக தம்மை வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பொது அமைப்புகள் தான் இப்படி என்றால் முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்ற கல்வியாளர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் நிலை இந்த பொது அமைப்புகளின் தன்மைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அன்று... ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளோர் என்போர் எந்த ஆக்கபூர்வமான பங்களிப்புமின்றி, அதிகாரத்தினை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்பதற்கு திராணியற்றி இருக்கின்றனர்.

மேற்சொன்ன பிரிவினர்களில் ஒன்று, இரண்டு புற நடைகள் இருக்கின்றனர்தான்.
ஆனாலும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையான பிரிவினர் , தாம் செய்ய வேண்டிய சமூகப்பணியை செய்யாதவர்களாவும், தம்மை பாதுகாத்துக் கொள்பவர்களாகவும் , மிக குறுகிய நலன் சார்ந்த சிந்தனை கொண்டவர்களாகவுமே உள்ளனர். இந்த நிலைக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அகம் சார்ந்த உள்ளடக்கமே , அதன் சமூகப் பிரதி நிதிகளை பிரசவிக்கிறது. இந்த நிலையில் மாற்றம் நிகழ வேண்டுமானால் அதன் சிந்தனை, செயற்பாடு சார்ந்த உள்ளடக்கம் மாற வேண்டும். நாம் ஏலவே சொன்னது போல் இது பெரும் கூட்டு உழைப்பையும் அர்ப்பணத்தினையும் கோரி நிற்கும் பணியாகும்.

இந்த சரணாகதி, சுய நலம் சார்ந்த , ஒதுங்கிப் போகும் நிலைக்கு, சகோதரர் ரம்சி ராசிக்கின் கைதும், அவரது தடுப்புக்கால சமூக நிலையையும் ஒரு எடுத்துக் காட்டாக சொல்ல முடியும். எம்மை பொறுத்தவரை, சமூக வலைதளங்களின் வழியாக முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தினை மிகத் துணிச்சலாக எதிர் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உண்மைப் போராளியாக ரம்சி ராசிக்கினை சொல்ல முடியும்.
சமூகத்திற்கான அவரது எழுத்தின் காரணமாக ஆளும் இனவாத அதிகாரவர்க்கம் அவரது குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி பணிய வைக்க , ரம்சி ராசிக்கை கைது செய்து தடுப்பில் வைத்திருந்தது. அவரது விடுதலைக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் குரல் எழுப்பவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவரது அயராத, துணிச்சலான பங்களிப்பினை மதித்து அவரது விடுதலைக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இலங்கை முஸ்லிம் சமூகம் சார்ந்த கல்வியாளர்கள் இது தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து, சமூகத்திற்காக , அச்சுறுத்தலுக்கு அடிபணியாது எழுதிய ரம்சி ராசிக்கிற்கு வழக்காட ஒரு சட்டத்தரணிகள் கூட முன் வரவில்லை. இதுதான் முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலையும், பொது அமைப்புகளினதும், சமூக சக்திகளினதும் நிலையுமாகும். ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோற்றுமணி பதம்.
இல்லாது விட்டால் , உடலங்களை எரிப்பதற்கு எதிராக எழுத வேண்டாம், ஆட்சியாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று , நியாயமாக எழுப்ப வேண்டிய குரல்களுக்கு காயடிப்பார்களா? இவர்கள் பின் கதவால் சென்று காலில் விழுந்து , சிங்கள ஆட்சியாளர்களிடம் தமக்கான சலுகைகளை பெறுவது போல், சமூக, மக்கள் உரிமைகளை பெறலாம் என இன்னுமா நம்புகிறார்கள்?.
இன்றைய நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம், தனக்கான சிவில் சமூகத்தினை வளர்த்தெடுத்து முன்னுனைப்படுத்துவதும்,அச்சிவில் சமூகமானது தான் சார்ந்த சமூக உரிமைகளுக்காக அரசியல் ரீதியாக குரல் எழுப்புவதும், செயற்படுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அத்தியவசிமான பணியாகி விட்டுள்ளது. அச் சிவில் சமூகமானது அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதும், இலங்கையின் ஏனைய இன, மத, மற்றும் முற்போக்கு சக்திகளுடன் உறவாடுவதும், இணைந்து பயணிப்பதும் தவிர்க்க முடியாதது.
தொடரும்.......
தொடர்ச்சியான வாசிப்புக்கு , இக்கட்டுரையின் 1வது தொடர் பின்னூட்டப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது...
http://www.importmirror.com/2020/11/blog-post_380.html
0 comments :
Post a Comment