நாடு முழுவதும் ஹஜ் கமிட்டி மூலம் 2021ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் புறப்படும் விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை, கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 21லிருந்து 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபர் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு கேரள மாநிலம் கொச்சியிலிருந்து விமானங்கள் புறப்படும் என்ற இந்திய ஹஜ் கமிட்டியின் அறிவிப்பு இம்மாநிலங்களிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சுமார் 4500 பேரில் அதிகமானோர் முதியவர்கள் மற்றும் பெண்கள் ஆவார்கள். தொலை தூரத்தில் உள்ள கொச்சி விமான நிலையம் சென்று ஹஜ் பயணம் மேற்கொள்வதில் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்ததை போன்று சென்னையிலிருந்து விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னையிலிருந்து விமானங்களை இயக்க வலியுறுத்தியும் விமான நிலையங்களில் செய்யப்படவேண்டிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்து தமிழக அரசின் சார்பாக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எழுதிய கடிதத்தையும் கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தில் ஹஜ் கமிட்டியும் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகமும் உடனடியாக கவனம் செலுத்தி சென்னையிலிருந்து விமானங்கள் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்யது இப்ராஹிம் கனி
ஊடகத்துறை
0 comments :
Post a Comment