இலங்கை முஸ்லிம்களின் சிவில் சமூக அரசியல் ?



முன் விளக்கமும், தெளிவையும் நோக்கி.....
பகுதி-01

ல்வேறு வழிகளில் ஒடுக்கப்படும் ஒரு சமூகம், பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளிடம் மட்டும் தமது அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான விடயங்களை பாரம் கொடுத்து விட்டு, அதன் சிவில் சமூகம் செயலற்று, கைசேதமாக நிற்கும் நிலைக்கு மிகச் சிறந்த உதாரணம் இலங்கை முஸ்லிம் சமூகமாகும்.
இதனையிட்டுத்தான் நாம் தொடர்ச்சியாக ஒரு கேள்வியை கேட்டு வருகிறோம்! இலங்கை முஸ்லிம்களுக்குள் உள்ள இந்த கட்சிகளைக் கடந்து, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்திற்கு ஒரு அரசியல் உள்ளாதா என்பதே எமது கேள்வியாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பலவீனமான அரசியல் கற்கை, வாசிப்பின் காரணமாக இக்கேள்வியின் ஆழத்தினையும் முக்கியத்துவத்தினையும் , இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள பெரும்பான்மையினர் உணரத் தவறி விடுகின்றனர். இன்னொரு வகையில் சொன்னால் முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள கட்சிகளின் அரசியல்தான் , முஸ்லிம் சமூகத்தின் அரசியல் என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மிகத் தவறான புரிதலின் காரணமாகவும், இன்னும் பல காரணிகளாலும் , இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் சுயாதீனமான சிவில் சமூக கட்டுருவாக்கம், அதற்கான அடிப்படையான அத்திவாரங்கள் நிகழவில்லை. இலங்கை முஸ்லிம் மக்களுக்குள் இந்த நிலை மாறுவதற்கு அடிக்கட்டுமான பணிகள் செய்யப்படல் வேண்டும்.
இந்த மாற்றம் ஒரு இரவுக்குள் நிகழ்வது சாத்தியமில்லை. இதற்கு அதிகூடிய உழைப்பும் , கற்றலும், களப்பணியும் அவசியமாகும்.
இதற்கு முன் நிபந்தனையாக இலங்கை முஸ்லிம்களுக்குள் உள்ள கட்சிகளிளும், பேரினவாத சிங்கள மேலாண்மைக் கட்சிகளிலும் அங்கத்துவமோ, அதன் முழு நேர, பகுதி நேர ஆதரவாளர்களாக இன்று இல்லாதவர்களும், குறுகிய இனவாத , கருத்து நிலைகளைக் கடந்தவர்களும், எத்தரப்பில் இருந்தும் ,
எந்த மக்கள் மீதும் அநீதிகள், ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை கண்டிக்கும், எதிர்க்கும் அரசியல், சமூக உறுதியும் கொண்டவர்களாக இருத்தல் இந்த முக்கிய பணியைச் செய்வதற்கு அடிப்படை அவசியமாகும்.
இதில் இன்னொன்றும் முக்கியமானது, இதனைச் சொன்னால் முஸ்லிம் சமூகத்திலுள்ள பலருக்கு வேப்பங்காய் கசப்பு, அதாகப்பட்டது “ இலங்கை முஸ்லிம் சமூகத்தினை அனைவரும் ஒடுக்குகிறார்கள், இலங்கை முஸ்லி ம் சமூகமும், அதன் அரசியல் தலைவர்களும் தவறு செய்வதே இல்லை”. அதனால் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை வெளியில் இருந்தோ, சமூகத்திற்குள் இருந்தோ , அதன் தவறுகளைச் சுட்டி, யாரும் நியாயமாகக் கூட விமர்சிக்க முடியாது “ என்கிற யாதார்த்தம் கடந்த மனோ நிலையில் இருப்போர், இந்த சிவில் சமூகப் பணிக்கு பொருத்தமற்றவர்கள்.
0000
யாதார்த்தத்தின் அடிப்படையிலும், சமூக நிலைமையின் அடியாகவும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் சுயாதீனமானதும், அறிவார்ந்ததுமான ஒரு சிவில் சமூக உருவாக்கம் நிகழ வேண்டுமானால் ,

இந்தப் பணிக்கு 3 விடயங்கள் முக்கியமானவை.

01. எந்த அரசியல் கட்சிகளினதும் தீவிர உறுப்பினர்களாக , அதன் பிரதிநிதிகளாக செயற்பாட்டளவிலும், மனதளைவிலும் இல்லாது இருத்தல். ( கட்சிகளில் இருந்து நம்பிக்கை இழந்தோர், சிவில் சமூக ரீதியாக செயற்பட விரும்பின் தமது கட்சி உறுப்புரிமையை விட்டு நீங்குவதும், அதன் மீதான பொறுப்புத் துறப்பினை பகிரங்கமாக செய்வதும் அவசியம்.)
ஒரு அரசியல் சமூகம் என்ற அடிப்படையிலும் , ஒடுக்கப்படும் மக்கள் என்ற வகையிலும் இலங்கையின் பெரும்பகுதி முஸ்லிம் மக்களை பார்க்கும் போது ...
அ. ) ஒரு பகுதியினர் இந்த அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களாக , அல்லது இதன் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
ஆ.) இன்னொரு பகுதியினர் எந்தக் கட்சிகளிலும் உறுப்பினர்களாகவோ , அதன் தீவிர ஆதரவாளர்களாவோ இல்லை. தேர்தலின் போது தமக்கு சரியெனப்படும் கட்சிகளுக்கு வாக்களிப்பவகளாகவும், சமூக, மக்கள் நன்மைகளை முன் நிறுத்தி எடுக்கப்படும் தீர்மானங்களை ஆதரிப்பவர்களாகவும், சமூக, மக்கள் நன்மைகளுக்கு எதிரான விடயங்களில் இக்கட்சிகள் பங்காற்றும் போது அதனை மனதளவிலாவது கண்டிப்போராகவும் இருக்கின்றனர்.
இ.) இன்னொரு பகுதியினர் எந்தக் கட்சிகளின் உறுப்பினர்களோ, அதன் தீவிர ஆதரவாளர்களோ இல்லை என்பதுடன் இக்கட்சிகளின் அரசியலில் நம்பிக்கையிழந்த பிரிவினர்.
ஒரு மேலோட்டமான சமூக ஆய்வுத் தகவலின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள மக்கள் பிரிவினரில் ஆ. பகுதியில் உள்ளவர்களே பெரும்பான்மையானோராகவும், இ. பகுதியினர் சிறுபிரிவினராகவும், அ. பகுதியினர் சமூகத்தில் 35 சதவீதம் தொடக்கம் 40 சதவீதமாகவும் இருக்கின்றனர்.
இந்த அ. பகுதியை சார்ந்த 40 சதவீதமானோர், அவர்கள் இந்த அரசியல் கட்சிகளில் இருந்து தமது அங்கத்துவத்தினை துறக்காதவரை, அல்லது அவர்களது ஆதரவு நிலைப்பாட்டினை விலக்கிக் கொள்ளாது வரை அவர்கள் நாம் சொல்லும் சிவில் சமூக கட்டுமாணத்திற்குள் வர முடியாதவர்கள். ( மேலதிக விளக்கம் தேவையானோர் சிவில் சமூகம் என்றால் என்ன என்பதை தேடி வாசிக்கவும் ).
இப்படிச் சொல்வதால் இந்த முக்கிய சமூகப் பிரிவினரை, சமூக சக்திகளை ஒதுக்குவது நோக்கமன்று. நடைமுறை உதாரணத்துடன் இதனை உங்களுக்கு நாம் சொல்ல முடியும்.
* உதாரணமாக ஒரு விடயம் சார்ந்து ,அல்லது ஒரு நிலைப்பாடு சார்ந்த முடிவின் போது இப்பிரிவினர் தமது கட்சிகளின் , தலைமைகளின் முடிவுகளையே நியாயப்படுத்துவர், அதற்காகவே வாதிடுவர். அல்லது மௌனமாக இருப்பர். துணிந்து தவறான ஒரு முடிவுக்கு எதிராக பேசமாட்டர். இது கட்சி அரசியலுக்கு உகந்ததே ஒழிய, சிவில் சமூக அரசியலுக்கு ஊறு விளைவிக்கும் அம்சமாகும்.
ஆகவே, சிவில் சமூக அரசியலானது , படிமுறை தேர்வின்படி- இ, ஆ பிரிவினரை உள்ளடக்கி கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். இவ்விரு பிரிவினரையும் அடித்தளமாகக் கொண்ட சிவில் சமூகமே, தாம் ஒடுக்கப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற போது தனக்காக பேசும் தார்மீகப் பலத்தினை பெறுவதுடன், முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள இன்றைய பாரளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளையும் நிர்ப்பந்திக்கவும், ஒரு சமூகத்தின் நியாயமான குரலாகவும் மேலேழ முடியும்.
தொடரும் ...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :