ஆனாலும் சுதந்திரம் கிடைப்பதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்த போது சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவர் என்பதை இந்திய முஸ்லிம்கள் அஞ்சினர். இதில் நியாயம் உள்ளதாகவும் நியாயம் இல்லை எனவும் கருத்துக்கள் உள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்றால் அதன் பிரதமராக ஜின்னாவை நியமிப்பதற்கும் தயார் என காந்திஜி கூறியதை ஜின்னாவோ முஸ்லிம்களோ ஏற்கவில்லை. அண்மையில் இலங்கையில் வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் இணங்கினால் அதன் முதலாவது முதல் அமைச்சராக முஸ்லிமை நியமிக்கவும் தயார் என திரு. சம்பந்தன் சொன்னது போன்றுதான் இது.
இருந்தும் அதனை ஜின்னா போன்றோர் மறுத்தமைக்கு காரணம் என்ன?
ஏற்கனவே சுதந்திரத்துக்கு முன்பே இந்தியாவில் முஸ்லிம், இந்து கலவரங்கள் அதிகம் நடந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய தீப்பொறியும் கலவரத்தை உருவாக்கும் நிலை இருந்தது. பிரித்தானியர் அந்நியர் என்பதால் அவர்கள் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சார்பாக இல்லாமல் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தனர். தமது ஆட்சிக்கெதிராக யாரும் செயற்பட்டால் அவர்கள் இந்து முஸ்லிம் என பார்க்கமாட்டார்கள். அவ்வளவுதான்.
இதனை இலங்கை 1915 சிங்கள, முஸ்லிம் கலவரத்திலும் கண்டுள்ளோம். பிரித்தானியர் மிக நேர்மையாக நடந்து கொண்டனர்.
ஆனால் சுதந்திரத்துக்கு பின் இலங்கையில் வந்த எந்தவொரு அரசும் கலவரத்தை அடக்குவதில் நேர்மையாக நடக்கவில்லை.
ஆனால் இந்தியாவை, பாகிஸ்தான் பிரிவு இன்றி அதே நிலையில் பிரித்தானியர் விட்டுச் சென்றால், ஒரு கலவரம் நடக்குமாயின் நிச்சயம் அரச படைகள் பெரும்பாலும் இந்துக்களாக இருப்பதால் முஸ்லிம்கள் தரப்புக்கு அநீதி நடக்கும் என்பதை முஸ்லிம் தலைவர்கள் பயந்தார்கள் என்பது உண்மை.
ஜின்னா பிரதமராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கெதிராக கூட இனவாத கோஷங்கள் எழலாம் (ஹிஸ்புல்லா ஆளுனராக நியமிக்கப்பட்ட போது தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது போல்) என்பதை ஜின்னா புரிந்திருந்தார்.
பாகிஸ்தான் பிரியாவிட்டால் முஸ்லிம்கள் இந்தியாவில் பெரும்பான்மையினராக, அல்லது சமமான விகிதத்தில் இருந்திருப்பர் என சிலர் சொல்கின்றனர். ஒரு கோணத்தில் உண்மையாக இருந்தாலும் அவ்வாறு பிரியாமல் இருக்கும் நிலையிலேயே பல கலவரங்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதும் உண்டு.
இன்று மோடி அரசு முஸ்லிம்களின் பிரஜா உரிமையை கூட பறித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அன்றைய இந்திய முஸ்லிம்கள் தூர சிந்தனையுடன் பாகிஸ்தானை கேட்டுப்பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.
காஷ்மீர் மக்களுக்கும் பிரித்தானியர் கூறினர் காஷ்மீர் முழுவதையும் பாகிஸ்தானுடன் சேர்ப்பதாக. ஆனால் அவர்களோ தங்களுக்கு தனி நாடே தேவை என்றும் அதுவரை இந்தியாவுடன் இருக்க போவதாக கூறினர்.
விளைவு இன்று காஷ்மீருக்குரிய விசேட அந்தஸ்த்தை கூட இழந்து அடிமைப்பட்ட நிலையில் உள்ளனர். அன்று காஷ்மீர் தலைவர்கள் தூர நோக்குடன் சிந்திக்கவில்லை.
இதே நிலையில்தான் இலங்கை முஸ்லிம்களும் இப்போது உள்ளனர்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்க பிரித்தானியர் முற்பட்ட போது முஸ்லிம்களுக்கு தனி சுயாட்சி வழங்க தயாராக இருந்தனர். வடக்கை தமிழர்களுக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் பிரித்து சுயாட்சி வழங்க தயாராக இருந்தனர். முஸ்லிம்கள் சுதந்திரத்துக்கு உடன்படாவிட்டால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்போவதில்லை என கூறினர்.
ஆனால் ரி பி ஜாயா போன்றோர் அப்படி தேவையில்லை, நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வோம் என்றனர். கிழக்கு முஸ்லிம்களிடம் கேட்காமல் இத்தகைய முடிவு எடுத்த முஸ்லிம் தலைமைகளால் இலங்கை தமிழர்களும், முஸ்லிம்களும் தொடர்ச்சியான ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டனர்.
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முஸ்லிம்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் உள்ளனர்.
எது எப்படியோ இன்றைய இந்தியாவின் இனவாத, மதவாத ஆட்சிகளை பார்க்கும் போது பாகிஸ்தான் பிரிவு என்பது மிகச்சிறந்த செயலாகும்.
ஜின்னாவுக்கு இறைவன் அருள் பாலிப்பானாக.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி
0 comments :
Post a Comment