அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபையில் மிகவும் பழுதடைந்த நிலையில் பாவனைக்குதவாமல் பல வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த சில இயந்திரங்கள், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முதல்வர் அவர்களின் 'மீள் உருவாக்கம்' எனும் எண்ணக்கருவுக்கமைவாக இம்மாநகர சபையின் வாகன திருத்துநர்களின் வேலைப் பங்களிப்புடன் குறைந்த செலவில் வெற்றிகரமாக திருத்தியமைக்கப்பட்டு, பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
மாநகர முதல்வர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.நிஸார், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், ஏ.ஆர்.செலஸ்டினா, கே.புவனேஸ்வரி, நடராசா நந்தினி, ஏ.ஆர்.பஷீரா, யூ.எல்.சித்தி சபீனா, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொ க்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமார், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் வாகனப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.தஸ்தகீர், எஸ்.இளங்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஸ்கிப் லோடர் (Skip Loader), ரோட் லோடர் (Road Loader), குபோடா ட்ரெக்டர் (Kubota Tractor) போன்றவை மாநகர சபையின் சேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வரினால் கையளிக்கப்பட்டன.
மாநகர முதல்வரின் 'மீள் உருவாக்கம்' எனும் இத்திட்டத்தின் கீழ் அவரது நேரடி ஆலோசனை, வழிகாட்டலில் ஏற்கனவே 04 உழவு இயந்திரங்கள் குறைந்த செல்வதில் வெற்றிகரமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, அவை திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வியந்திரங்களும் பெட்டிகளும் பழுதடைந்திருந்தமை மட்டுமல்லாமல் நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு, கவனிப்பாரற்றுக் கிடந்தமையினால் அவை மிகவும் துருப்பிடித்து, உருக்குலைந்து காணப்பட்டிருந்தன.
இவை மாநகர முதல்வரின் மேற்படி திட்டத்தின் பயனாக மாநகர சபையின் வாகன திருத்துநர்களின் வேலைப் பங்களிப்புடன் குறைந்த செலவில் திருத்தியமைக்கப்பட்டு, பாவனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment