உலகை ஆட்கொண்டிருக்கின்ற கொரோனா எனும் கொடிய நோயின் இரண்டாவது அலை தற்போது இலங்கையை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் மக்களிடையே காணப்படுகின்ற சந்தேகங்கக்கு சமூக ஆர்வலர் சட்டத்தரணி சஞ்சித் விளக்கமளிக்கிறார்.
இலங்கையை பொறுத்தவரை 1800களில் ஆம் ஆண்டு ஸ்பானிஸ் புளு தொற்று நோய் தொடங்கிய காலகட்டங்களில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அது காலத்திற்குக் காலம் வர்த்தமானிப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்டு வந்துள்ளது.
அதனடிப்படையில் 1925/08/28ஆம் திகதிய 7481ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தானியங்கள் களஞ்சியப்படுத்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளும்
1933/07/07 ஆம் திகதிய 7001ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கொள்ளை நோய்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளும்
1943/08/13 ஆம் திகதிய 9157ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பால்வினை நோய்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளும்
1946/06/21 ஆம் திகதிய 9570 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நுளம்புகள் மூலம் கடத்தப்படும் நோய்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளும்
1960/05/06ஆம் திகதிய 12,125 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளும் ‘முறையான அதிகாரி’ (Proper Authority) எனும் சொல்லமைப்பின் அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேற்குறித்த பதமானது பின்வரும் வரைவிலக்கணம் கொடுப்பதன் மூலம்
2020/03/25ஆம் திகதிய 2168/6 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சரினால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ‘முறையான அதிகாரி’ என்பது
(அ) இலங்கைத் தீவு முழுவதற்கும் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையதிபதி.
(ஆ) பின்வரும் நிர்வாக இடப்பரப்பில்
(i) ஒரு மாநகர சபை எனில் அதன் முதல்வர், அவர் இல்லாதவிடத்து அத்தகைய இடப்பரப்பின் சுகாதார மருத்துவ அலுவலர் அல்லது மேலதிக சுகாதார மருத்துவ அலுவலர்.
(ii) ஒரு நகர சபை எனில் அதன் தவிசாளர், அவர் இல்லாதவிடத்து சுகாதார மருத்துவ அலுவலர் அல்லது மேலதிக சுகாதார மருத்துவ அலுவலர்.
(iii) ஒரு பிரதேச சபை எனில் அதன் தவிசாளர், அவர் இல்லாதவிடத்து சுகாதார மருத்துவ அலுவலர் அல்லது மேலதிக சுகாதார மருத்துவ அலுவலர்.
(iv) ஒரு துறைமுக இடப்பரப்பில் தனிமைப்படுத்தல் பணிப்பாளர் அல்லது பிரதி தனிமைப்படுத்தல் பணிப்பாளர்.
சுகாதார அமைச்சரின் மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைப்பரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முறையான அதிகாரியாக மாநகர முதல்வர் செயற்பட வேண்டும் என்பதும் கொரோனா தடுப்பு தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் மாநகர முதல்வருக்கே அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அதேபோல் 2020/10/15 திகதிய 2197/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள், சுகாதார அமைச்சரினால் மேலும் திருத்தப்பட்டுள்ளன.
90ஆவது ஒழுங்கு விதி
கொரோனா நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் உள்ள ஆளொவ்வொருவரும் அல்லது அத்தகைய ஆள் இன்னொருவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதும் இடத்திலுள்ள ஆளொவ்வொருவரும்
(அ) எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவெளி பேணுதல் வேண்டும்.
91ஆவது ஒழுங்கு விதி
கொரோனா நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில்
(அ) ஆட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது,
(ஆ) நோய்க்குட்பட்ட ஆளொருவரை அல்லது நோய்க்குட்பட்டவரென சந்தேகிக்கப்பட்ட ஆளொருவரை சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்வது,
(இ) நோய்க்குட்பட்டவரென சந்தேகிக்கப்பட்ட எவரேனுமாளை அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும்
முறையான அதிகாரிக்கு சட்டமுறையானதாதல் வேண்டும்.
இத்தத்துவங்களின் பிரகாரமும் கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அத்தனை அதிகாரங்களும் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாநகர முதல்வருக்கே உரித்தானதாகும்.
92ஆவது ஒழுங்கு விதி
(1) ஆளொவ்வொருவரும் 91ஆம் பிரிவின் கீழ் ஆட்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படுவதன் மேல், கொவிட் பரவுவதை தடுப்பதற்காக முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறான காலப்பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் தங்கியிருத்தல் வேண்டும்.
(2) உப ஒழுங்கு விதி (1) இன் கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியின்போது ஆளொருவர்,
(அ) கொவிட் தொடர்பிலான நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பிரவேசிப்பதோ அங்கிருந்து வெளிச்செல்லுதலோ கூடாது.
(ஆ) கொவிட் தொடர்பிலான நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் ஏதேனும் பொது இடத்திற்குப் பயணித்தலோ அதனுள் பிரவேசித்தலோ கூடாது.
(3) ஆளொருவர் முறையான அதிகாரியினால் அனுமதிக்கப்பட்டாலொழிய உப ஒழுங்கு விதி (1) இன் கீழ் கொவிட் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்திலுள்ள ஏதேனும் நிறுவனத்தை, தொழிலிடத்தை அல்லது வேறேதேனும் ஒத்த வளவுகளை பொது மக்களுக்கு திறந்து விடலாகாது.
93ஆவது ஒழுங்கு விதி
கொவிட் தொடர்பிலான நோய்க்குட்பட்ட ஏதேனுமொரு இடப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பை அல்லது பொதுச் சுகாதாரத்தை பேணுவதற்கு தேவைப்பட்ட அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனம், வேலைத்தளம், பல்பொருள் அங்காடி, கடை, விற்பனை நிலையம் அல்லது வேறேதும் தொழிலிடம் என்பன தொழிற்படுவதனை அல்லது பணியாற்றுவதனை முறையான அதிகாரி அனுமதிக்கலாம்.
94ஆவது ஒழுங்கு விதி
கொவிட் தொடர்பிலான நோய்க்குட்பட்ட ஏதேனுமொரு இடப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பை அல்லது தேசிய பொருளாதாரத்தை அல்லது பொதுச் சுகாதாரத்தை பேணுவதற்கு அல்லது கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதும் சேவைகளை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனத்தின் அல்லது வேலைத்தளத்தின் தொழில்தருநர் அல்லது அதற்கு பொறுப்பாகவுள்ள ஆள்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களினதும் வேறு ஆட்களினதும் அதிகபட்ச எண்ணிக்கை விஞ்சலாகாது.
(ஆ) அத்தகைய நிறுவனத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(ஈ) அவர்களது உடல் வெப்பநிலை அளவிடப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(உ) முறையான அதிகாரியினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
95ஆவது ஒழுங்கு விதி
கொவிட் தொடர்பிலான நோய்க்குட்பட்ட ஏதேனுமொரு இடப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பை அல்லது தேசிய பொருளாதாரத்தை அல்லது பொதுச் சுகாதாரத்தை பேணுவதற்கு அல்லது கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதும் சேவைகளை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனத்தின் அல்லது வேலைத்தளத்தின் தொழில்தருநர் அல்லது அதற்கு பொறுப்பாகவுள்ள ஆள் ஒருவர்
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஆட்களின் அதிகபட்ச எண்ணிக்கை விஞ்சலாகாது.
(ஆ) அத்தகைய நிறுவனத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(ஈ) அவர்களது உடல் வெப்பநிலை அளவிடப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(உ) முறையான அதிகாரியினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
96ஆவது ஒழுங்கு விதி
எவரேனுமாளின் உடல் வெப்பநிலையானது முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டதை விட கூடுதலாகவுள்ளவிடத்து அத்தகைய ஆள் 94 மற்றும் 95 ஆவது ஒழுங்கு விதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய வேலைத்தளத்தினுள் அல்லது வளவுகளினுள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுத்தலாகாது.
97ஆவது ஒழுங்கு விதி
கொரோனா தொடர்பான ஏதேனும் இடப்பிரதேசத்தில் பொது மக்களை இடம்பெயர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வாகன மோட்டார் வாகனத்தில் சாரதி, நடத்துனர் மற்றும் சொந்தக்காரர் முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறாக இரு பயணிகளிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் முறையான அதிகாரியினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய நோய்த்தடுப்புக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
98 ஆவது ஒழுங்கு விதி
கொரோனா தொடர்பான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடு முறையான அதிகாரியினால் தளர்த்தப்படுமிடத்து, ஒரு பொது இடத்தினுள் அல்லது ஆளொருவர் இன்னொருவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்தினுள் பிரவேசிக்கின்ற ஒரு கூட்டத்தை, கருத்தரங்கை அல்லது வேறேதும் அதனையொத்த ஒன்றுகூடுதலை ஒழுங்கேற்பாடு செய்கின்ற அல்லது ஒழுங்குபடுத்துகின்ற அல்லது அத்தியாவசிய சேவைகளுக்குட்பட்ட எல்லாச் சேவைகளையும் பெற்றுக்கொள்கின்ற அத்தகைய ஆள் ஒவ்வொருவரும் முறையான அதிகாரியினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கக் கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
இத்தத்துவங்களின் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைப்பரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முறையான அதிகாரியாக செயற்படவல்ல மாநகர முதல்வரே கொரோனா தடுப்பு தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கும் செயற்படுத்துவதற்குமான முழு அதிகாரத்தையும் பொறுப்புடைமையையும் கொண்டிருக்கிறார் என்பதும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் எந்தவொரு அதிகாரிக்கும் இவை தொடர்பில் தன்னிச்சையாக செயற்படுவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்பதும் தெளிவாகிறது.
தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கருதிக் கொண்டு, இவ்வதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதானது மேற்படி வர்த்தமானி அறிவித்தல்களின் பிரகாரம் சட்ட முரணானதாகும். இதனால் வர்த்தகர்களினதும் பொது மக்களினதும் உண்மையான நிலைவரங்களை கவனத்தில் கொள்ளாமலும் சமூக, பொருளாதார பாதிப்புகளை கவனத்தில் கொள்ளாமலும் குளறுபடியான நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வதிகாரிகளினால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டமையும் இவ்வதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கை என்பதும் அதனால் மாநகர முதல்வர் மீது பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆகையினால், எந்த சட்டத்தின் பிரகாரம் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை தன்னிச்சையாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன் அவ்வாறான சட்டங்கள் ஏதும் இருந்தால் வெளிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சவால் விடுக்கின்றோம்- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment