இலங்கை தேர்தல்களும், வெளிநாட்டில் வசிப்போரின் வாக்குகளும்- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்



தொகுப்பு - எம்.எப்.பஸ்னா-
தேர்தல் வன்முறையைக் கண்காணிப்பதற்கான மையம் (CMEV ஏற்பாடு செய்த, இலங்கையர்கள் முற்கூட்டிய வாக்களிப்பு முறைமைக்கு தகுதியற்றவர்களா? சாத்தியமான சந்தர்ப்பங்கள் உள்ளனவா ? என்ற தலைப்பில் இணைய வழி செவ்வியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.

கேள்வி : இத்தலைப்பின் கீழ் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

பதில் : புலம்பெயர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்ற அதேவேளை, இலங்கையிலிருந்து கொண்டு வாக்களிக்கும் தினத்தில் கலந்துகொள்ள முடியாமல், அத்தியாவசிய வேலைப்பளுவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கக் கூடிய சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுப்பது சம்பந்தமாக நீண்ட காலமாக தேர்தல் ஆணையாளரோடு அடிக்கடி கதைத்து வருகின்றோம். இதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்வது ஒருபுறமிருக்க, இவ்விடயத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்திருக்கின்றோம்.

இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்காக ஏற்கனவே தபால் மூல வாக்களிப்பு நடைமுறையில் இருக்கின்றது. மேலதிக வாக்களிப்பு எனப்படும் மேலைத்தய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுவரும் ,வாக்களிக்கத் தவறியவர்களுக்கான வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான விவகாரத்தில் சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் எழாது.

குறிப்பாக, அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்க்கிலும், வளர்முக நாடுகளில் வாக்களிக்கும் விகிதாசாரம் வழமையாகக் கூடுதலாகத் தான் இருந்து வருகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தேர்தல்களில் மக்களின் ஆர்வம் மிகக் குறைவாகக் காணப்படுவதால் அங்கு வாக்களிக்கும் விகிதமும் குறைவாகத் தான் காணப்படுகின்றது. அந்த ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறான உபாயங்களையும், யுக்திகளையும் சட்ட ரீதியாக அங்கு மக்களுக்காக ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

எங்களுடைய நாட்டைப் பொறுத்தமட்டில் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்ற பெரிய தேர்தல்களில் வாக்களிப்பு விகிதாசாரம் 75 அல்லது 80 வீதம் வரையில் அமையப் பெறுகின்றது. இவ்விகிதத்தை மேலும் அதிகரிப்பதற்காக புலம்பெயர்ந்து வாழும் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தொழில் அல்லது வேறு விதமான காரணங்களுக்காக தங்களது குடியுரிமையை தக்கவைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றவர்களுக்காக இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கலாம்.

குறிப்பாக, வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக நாடுகளுக்கிடையிலான உடன்பாட்டு மற்றும் இணக்கப்பாட்டுக் கொள்கைகள் பேணப்பட வேண்டும். அதன் மூலம் இத்தகைய தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும் போது, சில நாடுகளில் தங்களது தாய்நாட்டிற்கான தூதரகத்திற்கு சமூகமளித்து தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமளிக்கப்படுவதான நினைவொன்று எனக்கு இருக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக் கொண்டால், ஏராளமான இலங்கையர்கள் அங்கு தொழில் புரிகின்றார்கள். வீடுகளில் பணிபுரிபவர்கள் இவ்விடயத்தில் வீட்டு எஜமானரிடத்தில் அனுமதி பெற்று தூதரகத்திற்கு செல்வதில் ஒருசில சிரமங்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், தூதரங்கள் தூர இடங்களில் இருப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமா என்ற சிக்கலும் இருக்கின்றது.

ஆனால், இத்தகைய சிக்கல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இவ்விடயம் அமுலுக்கு வருமானால், மிகவும் நல்லதொரு விடயமாகவே நான் கருதுவேன். இது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் எமது நாட்டின் ஜனநாயகம் ஒருபடி மேலே செல்வதாக கருதப்படும்.

அடுத்ததாக, அரசியல் கட்சிகளுக்குள் இருக்கின்ற பெரிய பிரச்சினை, எவ்வாறு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பதாகும். சமூகவலைத் தளங்களினூடாக பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்லலாம். வாக்காளர் பட்டியல்களை எடுத்து, வேட்பாளர்கள் பிரசுரங்களை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு சட்டரீதியான தீர்வுகளை பெறுவதே மிகவும் முக்கியமானதாகும்.

கேள்வி : இலங்கை நாட்டுக்கு முற்கூட்டிய வாக்களிப்பு முறைமை எவ்வளவு தூரம் முக்கியமானது? அத்துடன் சிறுபான்மை சமூகங்களுக்கு முன்கூட்டிய வாக்களிப்பு முறைமை இல்லாதிருப்பது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? குறிப்பாக, பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலில் குறிப்பிட்ட வாக்குத் தொகை கிடைக்கப் பெறாமல் போகும் போது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது?

பதில் : முற்கூட்டி வாக்களிக்கின்ற ஏற்பாடுகள் ஓரளவிற்கு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தாலும், இந்நாட்டில் வாக்களிப்பதில் சிரமங்கள் இருந்தாலும், வாக்களிக்கின்ற தினத்தில் வாக்காளர்கள் வருகை தருகின்ற வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது. தங்களுடைய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விடுமுறை வழங்காத பட்சத்தில், அல்லது அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற போது இந்த வாக்களிக்கும் வாய்ப்பு தவறவிடப்படலாம். குறிப்பாக, வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும் இதில் அடங்குவர். இவ்வாறு கணிசமான தொகையினருக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுவரையில் வேறொரு நாட்டில் குடியுரிமை பெறாத பட்சத்தில் குறிப்பாக, இந்தியாவிலிருக்கின்ற நாடற்று வாழும் அகதிகள் பல வருடங்களுக்காக சொந்த நாட்டுக்கு திரும்பாமலும், இன்னொரு நாட்டின் குடியுரிமையை பெறாமலும் இருக்கின்ற நிலையில், அந்தந்த சமூகங்கள் குறித்த மாவட்டங்களுக்கான ஆசனத்தையும் தவறவிட்டுவிட்டார்கள்.

ஏனென்றால், வாக்காளர் பட்டியல்களிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. கிராமசேவையாளர்கள் மூலம் ஒவ்வொரு வருடத்தின் நடுப்பகுதியிலும் ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் வாக்களிக்காத நபர்களின் பெயர், விபரம் நீக்கப்படுகின்றது. இதில் அந்தந்த சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாராளுமன்றத்தில் குறைத்துவிடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது.

குடியுரிமை பெறாதவர்களுக்கான வாக்குரிமையை ஏற்படுத்திக் கொடுப்பது இந்நாட்டின் ஜனநாயகத்தை மீட்டிக் கொடுப்பது மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தின் ஆசனங்களையும் மீளப் பெறுவதாக அமையும் என நான் நம்புகின்றேன்.

அரசியற் கட்சிகள் மேலும் ஓர் உபாயத்தை வழமையாகக் கையாள்வார்கள். அது தான் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் விபரங்களை கட்சி முகவர்களினூடாக முன்கூட்டியே அறிந்துகொண்டு கள்ள வாக்குகளை அளிப்பதாகும். அவர்களுக்கான தனியான தற்காலிக அடையாள அட்டைகளையும் குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர்களின் மூலம் பெற்றுக்கொள்வார்கள். எவ்வளவு தான் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்குச் சாவடிகளில் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும், இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறத்தான் செய்கின்றன.

இத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகளை பெரிய பெரிய கட்சிகள் கூட தத்தமது வாக்குச் சாவடி முகவர்களை முற்கூட்டியே தயார் செய்து முன்னெடுக்கின்றன.
இவ்வாறான தேர்தல் மோசடிகளை தடுப்பதற்காகவும் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அந்தந்த நாடுகளில் வாக்களிக்கும் முறைமை ஒழுங்கு செய்யப்படுமானால் வாக்களிப்பு மோசடிகளும் பெரும தடுக்கப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி : புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஏறத்தாழ 4 மில்லியன் மக்களுக்கான வாக்களிக்கும் முறைமையை பெறுவது மிக முக்கியம். அவ்வாறு அவ்வுரிமை வழங்கப்படுமாயின் அதற்குரிய பிரசார நடவடிக்கைளுக்காக எவ்வாறான உபாயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில் : ஒவ்வொரு நாடும் தனியான இடம்பெயர் வாக்காளர் பதிவேடு ஒன்றை தயாரிக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவமொன்றை புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து சேகரிக்க வேண்டும். ஏனென்றால், அவர்களின் விபரங்களை அவர்களாகவே தான் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சில காலமாக தத்தமது மாவட்டங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அவர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மாவட்டத்திலேயே தனியான வாக்குச்சாவடி மட்டுமல்லாமல், தனியான வாக்களிப்பு பதிவேடும் தயாரிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் விண்ணப்பமொன்றை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனை மீள் உறுதி செய்ய வேண்டிய தேவையும் இருந்தது. இதற்காக குறித்த ஒரு கால வரையறையும் வழங்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம். அதற்காகவே இதனை இலத்திரனியல் வடிவமாக விண்;ணப்பங்களை கோருவதையும், உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதனால் இம் முற் கூட்டிய வாக்கெடுப்பிற்காக தரவுகளை சேகரிக்கும் விடயத்தில் காணப்படும் சவால்கள் குறைக்கப்படலாம்.
தூதுவராலயங்களில் ஆட்சியில் இருப்பவர்களின் செல்வாக்கினால் தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். வெளிநாட்டு சேவையில் இருப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆளும் கட்சி சார்பாக இயங்குகின்ற தூதுவர்கள் சிலரையும் நியமித்து, தமக்கு தேவையான விடயங்களை சாதித்துக்கொள்கின்றனர். இந்த முறைமையினூடாக மோசடிக்கும் சில சமயங்களில் வழிகோலப்படுகின்றது.

தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக பலவிதமான திருவிளையாடல்களை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவே பார்ப்பார்கள். இவ்வாறான தேர்தல் முறைமையின் நம்பகத்தன்மையை அதிகரித்துக் கொள்வதற்கு நிறைய விடயங்களை கண்காணித்து யோசித்து முடிவுகளை எட்டவேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கதைத்து இதற்கான சட்டமூலங்களை அமுலாக்குகின்ற போது இவ்விடயங்களை கருத்திற் கொள்ளல் அவசியமாகும்.

புலம்பெயர்;ந்து வாழும் மக்களுக்கு வாக்குரிமைகளை வழங்கும் போது அவர்கள் இரட்டை பிரஜை உரிமையை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வாக்களிப்பதற்கும் முன்வருவார்கள். அதனை நாங்கள் ஊக்குவிப்பதாகவும் அமையும். நாட்டிற்கும் வருமானத்தை ஈட்டிக்கொள்ளத்தக்கதொரு விடயமாகவும் அது அமையும்.

கேள்வி : ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்காதமை பற்றி பாராளுமன்றத்தில் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. அவ்வாறு இவ்விடயம் தொடர்பில் விவாதிக்கப்படுமானால் தங்களது கொள்கை ரீதியான கருத்து எவ்வாறானதாக அமையும்?

பதில் : வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் மத்தியில் நாட்டின் அரசியல் சம்பந்தமான ஆர்வமும் விழிப்புணர்வும் அதீதமாக இருக்கின்றமை அனைவரும் அறிந்ததே. நாட்டிற்குள் வாழ்கின்றவர்களை பார்க்கிலும், வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களின் கண்காணிப்பும் விமர்சனங்களும் முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்தகையவர்களுக்கு இந்த வாக்களிக்கும் உரிமையை வழங்குவது ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குரிய பங்களிப்பாகத் தான் நோக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலம் வாக்குகளை எண்ணுகின்ற விடயத்தை பொறிமுறை ரீதியில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஏனெனில், தேர்தல் முடிவுகளை பெறுவதற்கு காலதாமதம் ஏற்படலாம். இதற்காக இணைய வழி வாக்களிக்கும் முறைமையை கையாளும் போது இந்த சிக்கல்கள் ஏற்படாது. அவற்றை பின்பற்றுவதே சாலச் சிறந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு ஊனமுற்றவர்களை கூட வாக்களிக்க ஊக்கமூட்டுகின்ற நடவடிக்கைகளை மிகச் சிறப்பாகவே செய்து வருகின்றது . அதற்காக விசேட ஏற்பாடுகளையும் செய்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :