கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிறந்த முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தினால் முழு நாடும் வங்குரோத்து நிலைக்கு உள்ளானது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு ஒரு போதும் வங்குரோத்து நிலையை அடையாது என்றும் கூறிய அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பலமான தலைமையின் கீழ் நாடு விரைவான அபிவிருத்தியை நோக்கி நகரும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நாட்டில் கட்டிட நிர்மாணத் தொழில் மற்றும் வியாபார சமூகத்தினர் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் என்ன குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், வரவு செலவுத் திட்டம் அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பேலியகொட C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (11) அரச பொறியியல் கூட்டுத்தபனத்தின் வளாகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
குறிப்பாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிரதமர் அலுவலகத்தின் தலைமை அலுவலகர் யோஷித்த ராஜபக்ஷ இக்கலந்துரையாடலில் பங்கேற்றார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்த பல் பொருள் அங்காடி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. ஆனால் கடந்த நல்லாட்சியின் போது இப்பணிகள் கைவிடப்பட்டு முறையான பயன்பாடின்றி களைகள் வளர இடமளிக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து பின்னர் முறையான பயன்பாடில்லாமல் இது கைவிடப்பட்டதாகவும் இதன் பணிகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பாழடைந்த இந்தக் கட்டிடத்தின் புனரமைப்பை ஒரு வருட காலத்திற்குள் நிறைவு செய்ய விரைவுபடுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியமையால் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறீனிமல் பெரேரா, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, அரச பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவர் ரத்னசிறி கலுபஹன மற்றும் உப தலைவர் பாக்ய ஜயதிலக உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment