நமது சமூகம் மௌனித்துவிட்டது
ஓட்டைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு
தாகம் பற்றிப் பேசும்
அவலத்தை சுமந்து நிற்கின்றோம்
எறும்புகளைப்போல்
எமது எல்லைகளைவிட்டு நகர்கின்றோம்
நமது மரபணுக்களிலும் சுயநலமே இருக்கிறது
துருப்பிடித்த வார்த்தைகளைப் பேசும்
நமது அரசியலிலும்
நம்பிக்கை அற்றுப்போனது
கிழிந்துபோன ஒரு ஆடைபோல்
அனாவசியமாக
அதை அணிந்துகொண்டிருக்கின்றோம்
நமது தசைகளுக்கும் ஆன்மாவுக்கும்
தொடர்பற்றுப்போனது
அதிகாலையில் வரும்
நமது சமூகம் பற்றிய துயரச் செய்திகள்
நம் உணர்வுகளை உறைக்கச் செய்வதே இல்லை
ஒவ்வொரு மையித்தாக எரிகிறது
இத்துயரை அடுத்த தலைமுறைக்காக
எழுதி வைப்பதைத் தவிர
வேறு எதைச் செய்ய முடியும்
0 comments :
Post a Comment