எங்கே செல்கிறது இன்றைய நவயுகத்தில் மனித நேயம்..



எம்.எம்.எப். ஹசீனா மொரட்டுவை பல்கலைக்கழகம்-
ந்தப் பூமிப் பந்தானது, உலக மனித வரலாற்றில் என்றுமில்லாத அளவில் சவால்கள் நிறைந்த ஓரிடமாக இன்று மாறியுள்ளது. மனிதன் மட்டுமல்லாது எல்லா உயிர்களும் தம் உயிரை பாதுகாத்துக்கொள்ள பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சவால்கள் என்பது என்ன? ஒரு அக, புற போராட்ட வடிவம் என்றே குறிப்பிடலாம். அத்துடன் சவால்கள் என்பது தோல்விக்கான போராட்டம் அல்ல, அது ஒரு புதிய வெற்றிக்கான உந்துக்கோல், பயணம் என்பதே சாலச்சிறந்தது. எனவே சவால்களின் வெற்றிக்கு மனித நேயத்தின் அவசியம் என்றும் இன்றியமையாத ஒன்று ஆகும்.
சவால்கள் எல்லாக்காலத்திலும் காணப்பட்டனவே, என வியந்தாலும் நவயுகத்தில் அதன் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த தசாப்தத்தில் காணப்பட்ட சவால்கள் இப்போது புதிய ஒரு பரிமாணத்தை, பரிணாமத்தை அடைந்துள்ளன.
அதாவது, நிற அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தி ‘கறுப்பினம்’, இழிந்த இனம் என ஏளனம் பேசிய காலம் இருந்தது. அந்த இழிந்த இனம் பல்துறை வளர்ச்சி கண்டபோதும் அமெரிக்காவில் ஒரு வெள்ளையின அதிகாரி கறுப்பினர் ஒருவரை தனது முழங்காலில் நெரித்துக் கொன்றதை கண்டோம். இது வெள்ளையின வெற்றியல்ல, மாறாக கறுப்பின சவால் தான், ஆனால் அதனை உலகமே ஒன்றுபட்டு எதிர்த்தது.
உலகில் உள்ள பல நாடுகள் பல்லின மக்கள் வாழுகின்ற நாடுகளாக உள்ளன. ஆனால் அங்குள்ள சிறுபான்மை இனங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறமுடியாது. இன, மத, மொழி வேறுபாடு காட்டி பேரின சக்திகளால் தூசிக்கப்படுகின்றன. அவை அங்கே காணப்படும் மிகச்சிறிய அளவிலான மனித நேயத்தில் தமது உயிரை பாதுகாக்கின்றன எனில் மிகை இல்லை.
மேலும் மனிதன் வாழுகின்ற சிறிய அலகான குடும்பங்களும் கணவன், மனைவி, பிள்ளைகள் என எளிய அமைப்புடன் மகிழ்ச்சியாக வாழுகின்றான் என கூறிவிட முடியாது.ஏனெனில் குடும்பங்களின் நிலை பரிதாபமாக சீரழிந்துள்ளது. அத்துடன் நவீன தொடர்பு சாதனங்களினால் தந்தையிடம் ஒரு அலைபேசி, தாயிடம் ஒரு தொலைபேசி, மகனிடம் ஒரு மடிக்கணினி எனக்குடும்பம் காணப்படுகிறது. இங்கு காணப்பட வேண்டிய குடும்ப அன்னியோன்யம் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இதுவும் ஒருவகை வாழ்நிலைச் சவாலாக முன்வைக்க முடியும்.
இவை அனைத்தையும் விட கொடிய விடயம் என்னவென்றால் உலகில் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவும் இன்றி பசியும் பட்டினியிடனும் மண்ணோடு மடியும் போது, வல்லரசு நாடுகள் சந்திரனில் கால் பதிக்கவும் செவ்வாயில் நிலம் எடுக்கவும் முண்டியடிக்கும் நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணமே உள்ளன.
இந்த வகையில் சவால்கள் நிறைந்த நவயுகத்தில் மனித நேயத்தின் அவசியம் பற்றி நோக்கும் போது மனிதன் இயல்பாகவே ‘மனிதம்’ நிறைந்தவன். அவன் இரக்கம், ஈகை, கருணை உணர்வுகளை கொண்டவன். இதனை தற்காலத்தில் ‘மென்றிறன்கள்(SOFT SKILLS )’ எனலாம். இத்தகைய உணர்வுகளின் மூலமே மனித நேயம் கட்டியெழுப்பப்படுகின்றது.
அந்தவகையில் திருக்குறள் என்ற அமுதம் தரும் மனித நேயம் என்னவென்றால்
“ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்” ஆகும்.
இவ்வாறு மனித நேயம் பற்றி நோக்கும் போது இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்து வாழ்ந்த கன்னியாஸ்திரியையான அன்னை தெரேசாவை ’நாம் மறந்து விட முடியாது. இவர் தனது மனித நேய குணத்தால் குரலற்றவர்களின் குரலாக (A voice for the voiceless) ஓங்கி ஒலித்து உலக வரலாற்றில் மகத்துவமிக்க , மாமனித நேயத்தின் மொத்த வடிவமாக திகழ்கின்றார். அடுத்ததாக இந்திய அரசியல்,சமூக வரலாற்றில் மகாத்மா காந்தியை மறந்துவிட முடியாது. துப்பாக்கியின் முன்னால் ‘சமாதானம் ‘ ‘அகிம்சை’ என்ற மனித நேய உணர்வுகளுக்கு அடையாளம் காட்டினார். இதே போல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் உலகமே போருக்கு தயாராகி இருக்கும் போது ‘ரஸ்ஸல் ‘ சமாதானம் வேண்டி ஜேர்மனிய வீதியில் ஊர்வலம் சென்றார். இத்தகைய மனித நேய நடவடிக்கைகள் எல்லா சவால்களின் போதும் தீர்வாக அமைந்துள்ளன.
எனவே மேலே கூறியவற்றை பார்க்கின்ற போது நவீன உலகம் அன்றாடம் சவால்கள் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. அவற்றை வெற்றிக்கொள்ள வேறு எந்த ஆயுதத்தையும் விட ‘ மனித நேயம்’ என்ற வலிமையான ஆயுதமே வெற்றிக்கொள்ளும் என்பதையே எடுத்துக்காட்டி பலர் வாழ்ந்தும் காட்டியுள்ளனர். எனவே மனித நேயம் கொண்டு சவால்களை வெற்றிக்கொள்வோமாக.


“ துன்பம் வரும் வேளையில் சிரியுங்கள்” - வள்ளுவம்-


"வழித்தடம்" - அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :