இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இன்னல்களையும் உரிமை மறுப்பு விடயங்களையும் எடுத்து நோக்கும் போது அரசியலிலும், ஆன்மீகத்திலும் பலவீனப்படுத்தி ஓரங்கட்டுவதற்கான செயற்பாடுகளாகவே காணப்படுகிறது. இலங்கையின் சுதந்திரம் மீட்புப்போராளிகளாகவிருந்து அரசாங்கத்திற்கு தங்களுடைய சொந்த நிலங்களை நன்கொடை வழங்கியவர்களாகவும் இம்மண்ணில் பிறந்து இம்மண்ணின் காற்றையே சுவாசித்து அரசின் சலுகைகளையும் அனுபவித்த எமது உடன்பிறப்புகளின் கொரோனா தொற்று ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதை தடுப்பதானது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும் என மாற்றத்திற்கான முன்னணியின் பிரதம செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், உலகப் புகழ்பெற்ற தொற்று நோயியல் பேராசிரியர் மாலிக் பீரிஸ் இறந்த உடலிலிருந்து தொற்றுப்பரவாது எனத் தெளிவுபடுத்தியுள்ளதை ஏன் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமலிருக்கிறது ? அதேபோன்று நிபுணர்கள் குழுவும் அதனை கவனத்திற்கொண்டு ஏன் பரிசீலனை செய்ய முடியாது? மாலைதீவு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நடாத்தி ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்காக பேசப்படும் பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு பிறந்த நாட்டிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இன்று மாலைதீவுக்கு ஜனாஸாக்களை அனுப்பும் அரசாங்கம் ஏன் எதிர்காலத்தில் மாலைதீவிற்கு சென்று குடியயேறுங்கள் என்று கூற முடியாது ?
மாலைதீவில் ஜனாஸாக்களை அடக்க முடியுமென்றால் இலங்கையில் மனித நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் ஏன் அடக்க முடியாது? மாலைதீவு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டுவதை பாராட்டுகின்றோம். ஆனால் அதனை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு முஸ்லிம்களின் பிரஜைத்துவத்தை இழக்கச் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம்.
WHO, UNESCO போன்ற நிறுவனங்களின் தொற்றுநோய்கள் தொடர்பிலான விஞ்ஞான ஆதாரங்களையும், கோவிட்19 உடல்கள் எவ்வாறு கிரியைகள் செய்யப் படவேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் புறந்தள்ளிவிட்டு எதேச்சதிகாரமாக செயற்படுவதை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.
அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டஉரிமைகளுக்கு அப்பால் எரியூட்டுவதற்காக கட்டணம் செலுத்துமாறு வேண்டுவதும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயற்பாடாகும்.
இந்நாட்டுப் பிரஜைகளின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் அச்சுறுத்தி பெரும்பான்மை சமூகத்திலிருந்து ஓரங்கட்டி மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடாத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment