கிழக்கிலே அம்பாறை மாவட்டம் குறிப்பாக கல்முனைப்பிராந்தியம் கொரோனாவினால் மிகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுவருகிறது. 500க்கும் மேல் தொற்றுக்கள்.ஒருவர் மரணம்.மக்கள் மரணபீதியிலுள்ளனர். தினம்தினம் தொற்று அதிகரித்துவரும் இன்றைய சூழலில் முழு மாவட்டத்தையும் முடக்கி மக்களைக்காப்பாற்றுங்கள்.
இவ்வாறு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சபைஅமர்வில் பகிரங்கமாக வேண்டுகோள்விடுத்தார்.
காரைதீவு பிரதேசசபையின் 34ஆவது மாதாந்த அமர்வு (16) புதன்கிழமை சபாமண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
கொரோனா முதலாவது அலைக்கு முழுநாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தீர்கள். அப்போது இவ்வாறான தாக்கங்கள் இல்லை. ஆனால் இன்று நிலைமை மோசமாகின்றது. நாட்டில் 150க்கும் மேற்பட்ட மரணங்கள்.
கல்முனைப்பிராந்தியத்தில் தினம் தினம் திகிலூட்டும் செய்திகள். மக்கள் மரணபயத்தில் உறைந்துள்ளனர்.
இங்கு பாடசாலைகள் திறந்திருக்கின்றன.மாணவரில்லை. பெற்றோர் பிள்ளைகளை அனுப்பத்தயங்குகின்றனர். பயம் பீதி. அப்படியெனின் எதற்காக பாடசாலை திறக்கப்படுகின்றது?
மாளிகைக்காடு கிழக்கு மக்களைக்காப்பாற்ற சுகாதாரஅதிகாரியுடனும் பிரதேசசெயலருடனும் பேசியே போக்குவரத்துக்கட்டுப்பாட்டிற்காக கயிறுகட்டினோம். ஆனால் சில விசமிகள் அதனை அறுத்துள்ளமை கவலைக்குரியது. அதாவது எம்மை ஏற்கவில்லையென்பதே கருத்து.
மக்களின் வரிப்பணத்தில் பயணிக்கும் நாம் மக்களைக்காப்பாற்றவேண்டிய பொறுப்பும் கடமையுமுள்ளது.
ஏழை நலிவுற்றவர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் வரப்பிரசாதமாகும். ஆனால் அதனை வழங்கும் முறை கேவலமாகவுள்ளது. அதாவது அது அரசியாக்கப்பட்டுள்ளது. பகிரங்கமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களை வைத்து பிரதேசசெயலகத்தில் நியமனங்களை வழங்கியிருக்கவேண்டும். ஆனால் அடிமட்ட அரசியல்வாதிகளின் வீடுகளில்வைத்து வழங்கப்பட்டமை கவலைக்குரியது. இனியாவது முறையாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
முஸ்லிம்களின் ஜனாசாக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.சிறுபான்மையினரை கிள்ளுக்கீரையாக நினைத்து விளையாடுகிறார்கள்.அதற்கு தலைவர்கள் இடமளிக்கக்கூடாது.என்றார்.
உப தவிசாளர் எ.எம்.யாகீர் உரையாற்றுகையில்:
முஸ்ல்ம்கள் கலிமாச் சொன்னவர்கள். அவர்களுக்கு நான்கு கடமைகளுண்டு. அதனைச்செய்யவேண்டும் .அதனைச்செய்ய உரிமையுண்டு. மதத்திற்குப்பின்னர்தான் அரசியல்.
இலங்கையில் பிறந்த முஸ்லிம்களின் ஜனாசா இலங்கையில்தான் அடக்கப்படவேண்டும். அதற்காக சம்மாந்துறை மன்னார் போன்ற பிரதேசங்கள் முன்வந்துள்ளன. எனவே இங்கே அடக்க அனுமதியுங்கள்.
மு.கா.உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் பேசுகையில்:
முஸ்லிம்களின் மனங்களை உருக்கும் கோரச்செயல் நடந்துகொண்டிருக்கிறது. ஜனாசாக்கள் எரிப்பதற்கு எதிராக குரல்கொடுத்த சகோதர எம்.பிக்களான சாணக்கியன் சுமந்திரன் உள்ளிட்டோருக்கு நன்றி கூறுகின்றேன்.
த.தே.கூ.உறுப்பினர் த.மோகனதாஸ் பேசுகையில்:
எமது பிரதேசத்திலுள்ள ஏனைய கடைகளுக்கு லெசன்ஸ்சை நாம் வழங்கும்போது இங்கிருக்கும் மதுபானசாலை எமது லைசன்ஸைப் பெறவில்லை. அதனைப்பெறாமல் அவர்களை அனுமதித்தது யார்? ஆட்டிறைச்சியின் விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்றார்.
மேலும் சில உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். குப்பைவரி உயர்த்தப்படுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. பெரும்பாலாக அனைத்துப் பிரேரணைகளும் எகமனதாக நிறைவேற்றப்பட்டன.
0 comments :
Post a Comment