கபன் சீலை கட்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நமது கவலைகளை எத்திவைக்கும்.!

பைஷல் இஸ்மாயில் - 

கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு வகையான சாத்வீகப் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கி விட்டன. கனத்தை பொது மயானத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெள்ளைச்சீலை கட்டும் போராட்டம் இன்னும் ஒரு புது வடிவம் எடுக்கத் தொடங்கி விட்டது என்று மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நலன் நோம்பல் அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளரும், கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமாகிய வைத்தியர் ஏ.சி.டில்சாத் தெரிவித்தார்.

"சமூகத்தின் பங்காளிகளாக நாமும் மாறுவோம், எமது பங்களிப்பையும் செலுத்துவோம்"
எனும் தொனிப் பொருளில் கபன் சீலை கட்டும் நிகழ்வு இன்று (14) கல்முனை மயோன் மாவத்தையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கபன் சீலை கட்டும் போராட்டத்திற்கு உத்வேகமும், ஆதரவும் கொடுக்க வேண்டியது இன்றைய சூழலில் நமது கடப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் வீடுகள், கடைகள், பள்ளிவாயல்கள், வீதிகள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் கபன் சீலைகளை கட்டுவது,
அலுவலகங்களுக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடைகளை அணிவது போன்ற பல்வேறுபட்ட முறைகளில் இந்தப் போராட்டத்தை நாம் முன்னெடுக்க முன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன் மூலம் நாம் சொல்ல வேண்டிய செய்தியையும் நமது எதிர்ப்பையும், கவலையையும் அரசுக்கு தெரிவிக்க முடியும். இந்த விடயம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நிச்சயம் பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கபன் சீலை கட்டும் போராட்டத்தில் எல்லா இன மக்களும் எம்முடன் இணைந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

எமது அடிப்படை உரிமை மீறலில் மௌனமாக இருக்கும் இத்தருணத்தில் இப்படியான சிவில் சமூக போராட்டத்தை நாங்களாகவே முன் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத் தேவை எம்மவர் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கிறது. நமக்காக மற்றவர்கள் பேசும் போது நாமும் அவர்களோடு சேர்ந்து பேச வேண்டும். மௌனமாய், பார்வையாளர்களாக கடந்து சென்று விடாமல் நம்மாலான பங்களிப்பை கட்டாயம் இந்த போராட்டத்திற்கு வழங்க வேண்டும்.

நாட்டின் இன்றைய சூழலில் ஆர்ப்பாட்டம், பேரணி என்பதை தாண்டி இந்த வெள்ளைக் கபன் சீலைப் போராட்டத்தை ஒரு சமூகமாய் ஒன்றிணைந்து முன்னெடுக்க நமது தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் முன்வர வேண்டும். ஜனாஸாக்களை எரிப்பதற்கு பெட்டியும் இல்லை, காசும் இல்லை, கையெழுத்தும் போட மாட்டோம் என்று எப்படி ஒன்றாக குரல் கொடுத்து செயற்படுத்தினோமோ அதுபோல இந்தப் போராட்டத்தையும் செயற்படுத்த நாங்கள் முன் வரவேண்டும்.

கலந்துரையாடல்கள் புதிய வழிகளை திறக்கும். எதிர்ப்பு நடவடிக்கைகள் எமது கவலைகளை எத்திவைக்கும். அந்தவகையில் கபன் சீலை போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், அதன் அவசியம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதற்காக நம்மாலான சிறிய பங்களிப்பையாவது நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய முன் நிற்போம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :