சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வாழைச்சேனை மீனவர்கள் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை தங்களது தொழிலை மேற்கொள்ள கடலுக்குச் சென்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒக்டோபர் மாதம் 24 ம் திகதி மீனவர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சுமார் இரண்டு மாதங்களாக வாழ்வாதாரம் இழந்த நிலையில் வாழ்ந்து வந்த மீனவர்களின் நலன்கருதி அவர்கள் கடற்றொழிலில் ஈடுபட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் றுக்ஸான் குரூஸ் தலைமையில் வாழைச்சேனை துறைமுகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மீனவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதோடு படகுகளை கட்டம்கட்டமாக கடலுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்தவகையில், இன்று நூறு படகுகள் மாத்திரமே கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, தாம் பெரிதும் எதிர்பார்ப்புடன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடலுக்குச் செல்வதாகவும் மீனவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
0 comments :
Post a Comment