சமூக வலைதளங்களில் தானே ராஜாவாக வேண்டும் என்பதற்காக, போட்டியாக மாறக் கூடிய நிறுவனங்களை கையகப்படுத்துவது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, 'பேஸ்புக்' நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் 45 மாகாண அரசாங்கங்கள் பேஸ்புக் மீது வழக்கு தொடுத்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக் சமூக வலைத்தளம். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக உள்ளது. இதன் உரிமையாளரான, மார்க் சக்கர்பெர்க், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்க அரசாங்கத்தின், கூட்டாட்சி வர்த்தக ஆணைக்குழு ( Federal Trade Commission ) சார்பிலும், 45 மாகாணங்களின் சார்பிலும், ஒரே நேரத்தில், பேஸ்புக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.
மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில் செய்வதற்கான பொதுநடைமுறைகளை, பேஸ்புக் நிறுவனம் மீறியுள்ளது. தனக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படும் சிறு நிறுவனங்களை மிரட்டுவது, நசுக்குவது என, நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி விதிமுறைகளை மீறியுள்ளது. சமூக வலைதளங்களில் கோலோச்சும் வகையில், போட்டியாக உருவெடுத்த வேறு சில சமூக வலைதி தளங்களான, 'வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றை விலைக்கு வாங்கி, கையகப்படுத்தியது.
பல்வேறு கணணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களையும் வாங்கி, சந்தையில் தனக்கு எதிராக யாரும் போட்டியிடக் கூடாது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இதனால், பொதுமக்களுக்கும் வேறு வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விளம்பரதாரர்கள், நிறுவனங்களும், தங்கள் விளம்பரங்களை வேறு வழிகளில் வெளியிட முடியாத கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் சர்வாதிகாரமாக செயல்படுவதை தடுக்க வேண்டும். சந்தையில் போட்டி நிலவ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம், பல புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் வெளிவரும். இனி வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் முன் அனுமதியை பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில்:-
“நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். FTC ( Federal Trade Commission ) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.
பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் உபயோகித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment