ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ள நிலையில் அவருக்கு புதிய பதவியொன்று கிடைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் விலகுவதாக, சம்பிக்க எம்.பி நேற்று அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்தார்.
இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதாகவும், இவ்வாறான நிலையில் நாட்டுக்கு புதிய சமூக சக்தியொன்றை உருவாக்குவது தேவையாக உள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புதிய சமூக சக்தியொன்றை உருவாக்கும் நோக்கிலேயே, தான் கட்சியிலிருந்து விலகியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் இளைஞர் சமூகத்திற்கு, நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், இதனால் சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவது, தம் அனைவரினதும் கடமையாகும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இளைஞர் சமூகத்தினர் உரிய முறையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, புதிய சமூக சக்தியொன்று தேவையாக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment